சொந்த படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரவி மோகன்

2 mins read
414ec404-6225-409a-aaca-45e7a6fc715f
தொடக்க விழாவில் ஜெயம் ரவி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

நடிகர் ரவி மோகன் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

சூட்டோடு சூடாக, தனது நிறுவனம் சார்பாக, அவர் இரண்டு படங்களைத் தயாரிக்கிறார்.

ஒரு படத்துக்கு ‘பிரோ கோட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை கார்த்திக் யோகி இயக்குகிறார். ரவி மோகன் நாயகனாக நடிக்கிறார்.

மற்றொரு படத்துக்கு ‘ஆர்ட்னரி மேன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் யோகி பாபு நாயகனாக நடிக்க, ரவி மோகன் இயக்குகிறார்.

இந்நிலையில், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா சென்னையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெற்றது.

இதில் திரையுலகப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடக்க விழாவையொட்டி, இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டு படங்களுக்கும் பூசை போடப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய யோகி பாபு, ‘கோமாளி’ படத்தில் நடித்தபோதே தாமும் ரவி மோகனும் ‘ஆர்ட்னரி மேன்’ குறித்துப் பேசியதாகக் குறிப்பிட்டார்.

“ரவி மோகன் படம் இயக்குவது குறித்து நிறைய பேசியிருந்தோம். அவ்வப்போது சில கதைகள் குறித்தும் பேசுவோம். ‘நான் படம் இயக்கினால் கண்டிப்பாக நீதான் கதாநாயகன்’ என்றார் ரவி மோகன். அதுதான் இப்போது நடந்திருக்கிறது,” என்றார் யோகி பாபு.

இதையடுத்துப் பேசிய ரவி மோகன், தனது மனத்தில் எந்த அளவுக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் உள்ளது எனத் தனக்குத்தான் தெரியும் எனக் குறிப்பிட்டார்.

“யோகி பாபுவை நாயகனாக வைத்துப் படம் இயக்க ஆசைப்பட்டேன். இப்போது நானும் இயக்குநராகி விட்டேன். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் என்னுடைய இரண்டு திரைப்படங்கள் குறித்து அறிவிப்பதில் கூடுதல் மகிழ்ச்சி,” என்றார் ரவி மோகன்.

குறிப்புச் சொற்கள்