திறமைசாலிகளை அரவணைக்கத் தயார்: யோகி பாபு

2 mins read
dad42b8c-8ad7-4b9b-90de-ffe14d672326
யோகி பாபு. - படம்: ஊடகம்

திறமைசாலிகள் திரையுலகுக்கு வரவேண்டும் எனவும் அனைவரையும் அரவணைத்துச் செல்ல, தாம் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் யோகி பாபு.

ஊரெங்கும் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதல் குறித்துப் பேசிக்கொண்டிருக்க, யோகி பாபுவின் தந்தை காஷ்மீரில் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர் என்றும் யோகிபாபு அங்குதான் பள்ளிப்படிப்பை மேற்கொண்டார் என்றும் இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியது.

இதை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“அப்பா ராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அம்மாவும் நானும் அங்கு சென்று மூன்று மாதங்கள் தங்கியதோடு சரி. மற்றபடி, சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில்தான் படித்தேன்.

“எப்போதும் வகுப்பறையில் உட்காரவே மாட்டேன். அடிக்கடி கிரிக்கெட் விளையாட வெளியே ஓடிவிடுவேன் என்று ஆசிரியர் சொல்வார்.

“மாநில அளவில் பல விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். என் பள்ளி நாள்கள் மிகவும் பிடித்தமான காலம். அதைப் பற்றி அழகாக விவரிக்கும் ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறேன்.

“பிரதீப் ரங்கநாதன், ரவி மோகன் உள்ளிட்ட பலருக்கு அந்த கதை தெரியும். ஆனால், அதை நான் இயக்க மாட்டேன்.

“என்னைக் கோமாளியாக நினைத்து திரையில் பார்த்து மக்கள் சிரித்துவிட்டனர். எனவே, கடைசிவரை ‘ஜோக்கரா’கத்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

“இடையில், ‘மண்டேலா’, ‘கூர்க்கா’, ‘பொம்மை நாயகி’, ‘தர்மபிரபு’ போன்ற படங்கள் அமைந்தால் நாயகனாக நடிக்கத் தயார். அதற்காக அந்தப் பாதையில் போக மாட்டேன்.

“மறுக்க முடியாத நல்ல கதைகள் தேடி வரும்போது நடிக்கலாம். அதுதான் எனக்கு சரியாக இருக்கும்.

“எனக்கு நடிகர் ரவி மோகன் நல்ல நண்பர். ‘தில்லாலங்கடி’ படப்பிடிப்பில் என்னுடன் எப்படிப் பழகினாரோ அதே போன்றுதான் இப்போதும் பழகுகிறார்.

“என் மேல் மிகுந்த பாசம் கொண்டவர். அவர் இயக்கும் படத்தில் நான் நாயகனாக நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். படப்பிடிப்பு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என நினைக்கிறேன்,” என்று அண்மைய பேட்டியில் கூறியுள்ளார் யோகி பாபு.

குறிப்புச் சொற்கள்