நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) தனது 51வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குச் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய்க்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரது பிறந்தநாளில் ‘ஜன நாயகன்’ படத்தின் முதல் காணொளியை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது படக்குழு.
அத்துடன், முதல் சுவரொட்டியும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு கையில் வாளுடன் விஜய் கோபமாக இருப்பது போன்ற காட்சி இடம்பெற் றுள்ளது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள காணொளியின் தொடக்கத்தில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற வசனத்துடன் தொடங்கி, “உண்மையான தலைவன் உருவாவது பதவிக்காக அல்ல, மக்களுக்காக,” எனக் குறிப்பிட்டு விஜய் காவலரின் தோற்றத்துடன் வருவது போன்று காட்டப்பட்டுள்ளது.
கையில் வாள் வைத்துக்கொண்டு மீசையைத் தொடுவது போன்ற காட்சிகளும் இருப்பதால், ‘Jana Nayagan First Roar’ என அவரது ரசிகர்கள் காணொளியையும் விஜய்யின் தோற்றத்தையும் இணையத்தில் டிரெண்டாக்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இணையத்தில் விஜய்க்கான பிறந்தநாள் வாழ்த்து ஹேஷ்டேக்கும் பிரபலமாகி வருகிறது.
ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் அரசியல் வருகையையும் மக்களுக்கான நாயகன் என்பதையும் படத்தின் தலைப்பு குறிப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், வரலட்சுமி சரத்குமார், பாபா பாஸ்கர், கௌதம் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ் என்று ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.
கேவிஎன் புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில், “இதுவரை 68 படங்களில் நடித்துள்ள விஜய்யின் 30 வருட சினிமா வாழ்க்கையிலிருந்து ஃபோர்ப்ஸ் 2024 அறிக்கையின்படி விஜய்யின் நிகர சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலர் ஆகும்.
“சினிமாவை விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வந்தது எம்ஜிஆர் போன்ற நடிகர்கள் அரசியல் தலைவர்களாக மாறியதன்பால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறந்த நகர்வை எடுத்துக் காட்டுகிறது.
“ஜனநாயகன்’ படத்தின் முன்னோட்டக் காட்சிகள் விஜய்யின் அரசியல் பயணத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது. இது சிறந்த பொழுதுபோக்கு படம் என்பதையும் தாண்டி கலாசார, பொருளாதார முக்கியத்துவத்தை இந்தப் படம் அடிக்கோடிட்டு காட்டுவதாக அமைந்துள்ளது,” என்று தெரிவித்துள்ளது.
‘வெற்றி’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ்த் திரையுலகுக்கு வெற்றிப் படங்களை அள்ளிக் கொடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவராகவும் வலம் வருகிறார் விஜய்.
விலை போகாத மூஞ்சி என்று விமர்சிக்கப்பட்டவர்தான், இன்று தமிழ்த் திரையுலகில் அதிகளவில் விலைபோகும் படங்களை ஆண்டுதோறும் அள்ளித் தருகிறார். ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருந்தாலும், ‘ரசிகன்’ படத்தின் மூலமாகவே பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக உருவெடுத்தார்.
‘காதலுக்கு மரியாதை’, ‘திருப்பாச்சி’ ஆகிய திரைப்படங்களுக்காக தமிழ்நாடு அரசின் விருதினை இரண்டு முறை பெற்றிருக்கிறார் விஜய்.
இப்படி ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வரும் விஜய் இன்று ஒரு படத்துக்கு ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் பணக்கார நடிகராகவும் வலம் வருகிறார்.