திரையில் விரியும் எளிய மனிதனின் வாழ்வு ‘பத்தா’

திரையில் விரியும் எளிய மனிதனின் வாழ்வு ‘பத்தா’

1 of 2
படம்: விகடன்
படம்: விகடன்

26 Sep 2026 - 3:47 pm

2 mins read

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ போன்ற வித்தியாசமான படைப்புகளை வழங்கியவர் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

தமிழ் சினிமாவில் எளிய மனிதர்களின் இயல்பான உணர்ச்சிகளையும் வாழ்க்கையின் இயல்பான தருணங்களையும் திரைமொழியாக்குவதில் தனித்துவமானவர் எனப் பெயரெடுத்த இயக்குநர்.

தற்போது நடிகர் விஜய் சேதுபதியுடன் இவர் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘பத்தா’. 1980களின் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் குறித்து இயக்குநர் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான தகவல்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இக்கதையின் கரு உருவான விதம் குறித்து அண்மையில் ஊடகப் பேட்டியில் பேசியுள்ளார் பாலாஜி தரணிதரன்.

“நான் கதை எழுதும்போது எந்த நடிகரையும் மனத்தில் வைத்து எழுதுவதில்லை. 1980களில் நான் திருவல்லிக்கேணியில் வளர்ந்தபோது கண்ட அனுபவங்களும் மனிதர்களும் என் மனத்தில் ஏற்படுத்திய தாக்கமே இக்கதை உருவாக முக்கியக் காரணம்.

“கைப்பேசிகள் இல்லாத அந்த உலகத்தில், ஒரு சாதாரண மனிதனின் வேதனை, மகிழ்ச்சி, கண்ணீர், புன்னகையை அசலாகச் சொல்ல முயன்றிருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் பாலாஜி.

மேலும், ‘பத்தா’ என்பது கதாநாயகனின் புனைபெயர் என்றும் மனிதர்களிடம் இயல்பாக இருக்கும் அப்பாவித்தனம் தொலைந்து, மீண்டும் அது வாழ்க்கையில் திரும்பக் கிடைக்கும் புள்ளியே இத்திரைப்படத்தின் மையம் என்றும் அவர் விவரித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து முதன்மைப் பாத்திரத்தில் லிஜோமோல் நடித்திருக்கிறார்.

‘சித்தா’ புகழ் சிறுமி சகஸ்ரா, ‘மெட்ராஸ்’ ஹரிகிருஷ்ணன், சாந்தி பாலச்சந்தர், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வளரும் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 1980களின் காலகட்டத்தைக் கச்சிதமாக உள்வாங்கி அவர் உருவாக்கியுள்ள பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் ஆன்மாவை மெருகேற்றும் வகையில் இருக்குமாம்.

கார்த்திக் நேத்தாவின் வரிகளில் வெளியான ‘மகளே’ பாடல் ஏற்கெனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. புகழ்பெற்ற இயக்குநர் அட்லீ தயாரிப்பில், செல்வகுமாரின் ஒளிப்பதிவிலும் கலைவாணனின் படத்தொகுப்பிலும் உருவாவது இப்படத்திற்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளதாக இயக்குநர் பாராட்டுகிறார்.

“ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்காமல், தன்னை முற்றிலும் மாற்றிப் புதுப்பித்துக்கொள்வது விஜய் சேதுபதிக்குக் கைவந்த கலை.

“‘96’, ‘மகாராஜா’ படங்களைப்போல ‘பத்தா’ திரைப்படமும் அவரது திரைப்பயணத்தில் முக்கியமானதோர் இடத்தைப் பிடிக்கும்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் பாலாஜி தரணிதரன்.

எளிய மனிதர்களின் உணர்வுகளை இயல்பாகப் பிரதிபலிக்கும் இத்திரைப்படம், நிச்சயமாக தமிழ்த் திரையுலகில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கலாம் என்று படக்குழு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்
விஜய் சேதுபதிதிரைப்படம்இயக்குநர்