அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் ஜனவரி 30ஆம் தேதி அன்று வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் படங்கள், திரையரங்கில் இருவாரங்கள் ஓடிய பின்னர் ‘விடாமுயற்சி’ தனித்து வெளியாகும் என்றும் இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படாது என்றும் தயாரிப்புத் தரப்பு கருதுகிறதாம். எனினும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையே, அஜித் நடிக்கும் படங்கள் என்றால் ரசிகர்கள் எதுகுறித்தும் யோசிக்காமல் திரையரங்குக்கு படையெடுப்பார்கள் என்ற மிதப்புடன் தாம் செயல்படவில்லை என ‘விடாமுயற்சி’ பட இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகில் ‘லாஜிக்’ இல்லாத படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கு மாறவேண்டும். இந்தியாவுக்கு வெளியே உருவாகும் படங்கள் யதார்த்தமாக, சில சமயங்களில் உண்மையாக இருக்கின்றன.
‘லாஜிக்’ இல்லாத படங்களைப் பார்த்தால் வெளிநாட்டவர்கள் சிரிப்பார்கள். அதனால் ‘விடாமுயற்சி’ படத்தில் மசாலா அம்சங்கள் எதையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு முழுமையான மனநிறைவை அளிக்கும். இது அடிதடியும் அதிரடியும் கலந்த படமாக உருவாகியுள்ளது.
“நான் விரும்பியதைப் போலவே அஜித்தும்கூட தேவையற்ற மசாலா அம்சங்கள் இல்லாத படத்தைத் தர வேண்டும் எனக் கூறியபோது ஆச்சரியமாக இருந்தது.
“அஜித் அதிகமாக வாசிக்கும் பழக்கம் உள்ளவர். நிறைய படிப்பது ஒருவரை நல்ல படங்களை உருவாக்குபவராக மட்டுமல்லாமல், ஒருவரை நல்ல மனிதராகவும் மேம்படுத்தும். மனித குணாதிசயங்களைப் பகுத்துப் பார்த்து யார் சரியானவர்கள், யாரெல்லாம் சரியற்றவர்கள் என்பதை அறிந்துகொள்ள உதவும்.
“அஜித் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது எனில், அதற்கு அவரது அந்த வாசிப்புப் பழக்கமும் விடாமுயற்சியும்தான் முக்கிய காரணங்கள்,” என்று கூறியுள்ளார் மகிழ் திருமேனி.
தொடர்புடைய செய்திகள்
‘விடாமுயற்சி’ படம் பல்வேறு தடைகளைக் கடந்து வந்ததாகக் கூறப்படுவது தவறான தகவல் என்றும் இதனால் அஜித் வருத்தமடைந்தார் எனக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் அண்மைய பேட்டியில் மகிழ் திருமேனி குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் படப்பிடிப்பை முடித்து அஜித்தின் பிறந்த நாளான மே முதல் தேதியன்று படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், படப்பிடிப்பு நடைபெற்ற அஸர்பைஜான் நாட்டில் ஏற்பட்ட எதிர்பாராத பனிப்பொழிவு எங்கள் திட்டத்தை அடியோடு மாற்றிவிட்டது.
“பனிப்பொழிவு நிற்பதற்காக மூன்று மாதங்கள் காத்திருந்தோம். இதுபோன்ற தடைகள், சிக்கல்களை எதிர்கொள்ள நான் முன்பே தயாராக இருந்தேன். இடையில் அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்பதும் முன்பே தெரியும்.
“விடாமுயற்சி’ படக்குழுவில் இருந்த அனைவரிடமும் சூழ்நிலையை நன்கு விவரித்து அவர்களது உதவியோடு படப்பிடிப்பை முடித்தேன். குறிப்பாக, நடிகை திரிஷாவும் நடிகர் அர்ஜுனும் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கினர்,” என்கிறார் மகிழ் திருமேனி.
இந்தப் படத்துக்காகத்தான் அஜித் தன் உடல் எடையைக் குறைத்து இளையரைப் போல் மாறிவிட்டார். சண்டைக்காட்சிகளில் அவரது அசைவுகளைப் பார்க்கும்போது அதிரடியாகவும் அழகாகவும் இருக்கும் என்றும் இயக்குநர் மகிழ் திருமேனி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

