தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சண்டை போடுவது என்றால் பிடிக்கும்: ரெஜினா

3 mins read
7155d5e6-76b6-4b7b-90bd-9f63e0a581ee
ரெஜினா. - படம்: ஊடகம்

திரிஷாவைப் போன்று ஒரு ஜாலியான நடிகையைப் பார்க்க முடியாது என்றும் அவரிடம் இருந்து தாம் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாகவும் சொல்கிறார் நடிகை ரெஜினா கசாண்ட்ரா.

இருவரும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டியில், தனக்கு ஓரளவு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார் ரெஜினா.

இதற்கேற்ப ‘விடாமுயற்சி’ படத்தில் தமக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்.

“இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்து பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. ஒவ்வொரு காட்சியையும் மிகவும் ரசித்து நடித்துள்ளேன். அவரைப் பொறுத்தவரை நடிகர்களுக்கு ஏற்ற இயக்குநர் எனலாம். அதேபோல் என்னை இயக்குநர்களுக்கு எற்ற நடிகை என்று அவர் பாராட்டியது அவரது பெருந்தன்மை.

“அனைத்தையும்விட இந்த படத்தின் மூலம் எனக்குத்தான் மிகவும் நல்ல பெயர் கிடைக்கும் என அஜித் கூறியதாக இயக்குநர் சொன்னார். அதைக் கேட்டதும் நான் அடைந்த உற்சாகத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

“எனக்கான கதாபாத்திரத்தை மெருகேற்றவும் நன்றாக நடிக்கவும் மிகவும் மெனக்கெட்டேன். கதை கூறும்போது மகிழ் திருமேனி விவரித்த கதாபாத்திரம் வேறு மாதிரியாக இருந்தது. ஆனால், நடித்தபோது வேறு கதாபாத்திரத்தில் நடித்ததுபோல் உணர்ந்தேன்,” என்கிறார் ரெஜினா.

எனினும், இரு கதாபாத்திரங்களுமே இவருக்குப் பிடித்தமானதாக இருந்தனவாம். பொதுவாக ரெஜினாவுக்கு சண்டை, அதிரடிக் காட்சிகளில் நடிப்பதில் விருப்பம் உண்டு.

அதனால், தாம் நடிக்கும் படங்களின் இயக்குநர்களிடம் இயன்றால் தனக்கு சண்டைக்காட்சிகள் வைக்கும்படி கேட்டுக்கொள்வதும் வழக்கமாம்.

“சண்டைக்காட்சிகளில் எப்போதுமே கூடுதலாக உழைப்பேன். பெண் கதாபாத்திரங்களுக்கும் ஒரு படத்தின் சண்டைக்காட்சிகளில் பங்கிருப்பது கூடுதல் மகிழ்ச்சி தரும்,” என்கிறார் ரெஜினா.

இந்நிலையில் ‘விடாமுயற்சி’ படத்தில் சண்டைக்காட்சிகளுக்கு பெயர் பெற்ற ‘ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுனுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்கிறார்.

“சண்டைக் காட்சிகளுக்காக அர்ஜுன் எந்த அளவுக்கு கடினமாக உழைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஒருநாள் படப்பிடிப்பின்போது, குறிப்பிட்ட ஒரு காட்சியில் அவருடன் சண்டை போட வேண்டிய நடிகர்கள் அனைவரும் அரை மணி நேரம் பயிற்சி செய்து விட்டு காட்சியில் நடிக்கத் தயாராகினர்.

“ஆனால் அர்ஜுனோ ஒரே டேக்கில், பயிற்சியின்றி அந்தக் காட்சியில் நடித்து முடித்தார். எல்லாரும் வியந்து போனோம். திரையில் பார்ப்பதைவிட அவர் சண்டையிடுவதை நேரில் பார்த்தபோது அதிகம் ரசிக்க வைத்தது,” என்று பாராட்டுகிறார் ரெஜினா.

திரிஷாவைப் பற்றியும் குறைவின்றி பாராட்டித் தீர்க்கிறார்.

“திரிஷா தனது திரையுலகப் பயணத்தில் பல்வேறு தடைகளை உடைத்து முன்னேறியவர். இந்தப் படத்தில் அவரது நடிப்பு வழக்கம்போல் அனைவராலும் பேசப்படும். ‘விடாமுயற்சி’ படத்தின் கதை என்ன என்று கேட்பவர்கள் எனது பதிலுக்கு காத்திருக்காமல் உடனடியாக முன்னோட்ட காட்சித் தொகுப்பை பாருங்கள். என்ன கதை என்பது இந்த தொகுப்பில் மறைமுகமாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

“படத்தின் ஒளிப்பதிவாளர் ஒம்பிரகாஷ், ஒவ்வொரு காட்சியையும் மிக அழகாக எடுத்துள்ளார். நான் அவரது தீவிர ரசிகை. அஜித் என் நடிப்பை பாராட்டினார் என்றால் நான் அஜித்துக்கு அடுத்தபடியாக ஒம் பிரகாஷைத்தான் பாராட்டுவேன்.

“அஸர்பைஜான் நாட்டில் உள்ள மிகக் குளிரான பகுதியில்தான் படப்பிடிப்பு நடைபெற்றது. குளிருக்குத் தாக்குப் பிடிக்கும் வகையில் உடைகளைத் தயாராக வைத்திருக்குமாறு கூறியிருந்தனர்.

“படப்பிடிப்பு தொடங்கிய சில நாள்களுக்குப் பிறகுதான் அங்கு போக முடிந்தது. என்னதான் முன்னேற்பாடுகளுடன் சென்று இருந்தாலும் என்னால் அந்நாட்டு குளிருக்குத் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

“முதல் காட்சிக்காக கேமரா முன் நின்ற அடுத்த நொடியே என் உடம்பு குளிரில் நடுங்கத்தொடங்கியது. இதில் வேடிக்கை என்ன தெரியுமா?” என்று புதிர் போடும் ரெஜினா, பதில் கூறுவதற்குள் “எனக்கு குளிர் என்றால் ரொம்ப பிடிக்கும்,” என்று குறும்பாக கண்ணடித்துச் சிரிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்