தமிழ் சினிமாவின் தலைநகரமான கோடம்பாக்கத்தில் உள்ள கதாநாயகர்களிடம் பொதுவாக ஒரு நல்ல குணத்தைக் காண முடியும்.
கடந்த ஆண்டில் எதிர்கொண்ட வெற்றி, தோல்விகள் குறித்தெல்லாம் அதிகம் யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல், அடுத்து என்ன கதை, படம், இயக்குநர் எனக் களமிறங்கி விடுவார்கள்.
அந்த வகையில், இவ்வாண்டு பெரிய கதாநாயகர்களின் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களின் வெளியீட்டுத் தேதி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.
அது குறித்துப் பார்ப்போம்.
அஜித்
‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் அவரது ரசிகர்கள் வருத்தமடைந்தனர். எனினும், பிப்ரவரி 6ஆம் தேதி படம் வெளியாவது உறுதியாகிவிட்டது.
தயாரிப்புத் தரப்பான லைகா நிறுவனம் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
“பண்டிகை நாளன்று படம் வெளிவரவில்லை எனக் கவலைப்பட வேண்டாம். படம் வெளியாகும் நாள், பண்டிகை நாளாக மாறும்,” என நடிகர் அஜித்தும் இயக்குநரிடம் கூறியிருக்கிறாராம்.
இந்த ஆண்டு முன்னணி நாயகனின் நடிப்பில் வெளியாகும் முதல் படம் ‘விடாமுயற்சி’தான். கடந்த ஆண்டு அஜித்தின் எந்தப் படமும் வெளியாகவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படமும் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. எனவே, அவரது ரசிகர்கள் இரட்டிப்பு உற்சாகத்தில் உள்ளனர்.
தனுஷ்
நடிகராக மட்டுமின்றி தனுஷ் இயக்குநராகவும் களமிறங்கியிருக்கும் இரண்டு திரைப்படங்கள் இவ்வாண்டு வெளியாகிறது.
அவர் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. முழுக்க முழுக்க இளையர்களை வைத்து, இளையர்களைக் கவரும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இப்படத்தை இயக்கி உள்ளாராம் தனுஷ்.
மேலும், இவர் இயக்கியுள்ள ‘இட்லி கடை’ திரைப்படமும் இவ்வாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மனிதர் நடிப்பிலும் குறை வைக்கவில்லை. சேகர் கமுலா இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ‘குபேரா’ திரைப்படமும் இவ்வாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா
சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கங்குவா’ திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவு வசூல் காணவில்லை.
படம் குறித்த விமர்சனங்கள் அவரைச் சீண்டும் விதமாக அமையவே, மனைவி ஜோதிகா விமர்சகர்களைப் பற்றியே விமர்சித்து பதிலடி கொடுத்தார்.
எனினும், வருத்தத்தை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பம்பரமாய் சுற்றி வந்தார் சூர்யா.
இதில் கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு தற்போது மற்றொரு புறம் நடந்து கொண்டிருக்கிறது.
விக்ரம்
கடந்தாண்டு ‘தங்கலான்’ பட நாயகனாக மிரட்டியிருந்தார் விக்ரம். இப்படத்திற்கான அவரது உழைப்பு பேரளவில் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
பின்னர், ‘சித்தா’ அருண்குமார் இயக்கத்தில் ‘வீர தீர சூரன்: பாகம் 2’ திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். ஒரே இரவில் நடக்கும் சம்பவம்தான் இத்திரைப்படத்தின் கதையாம்.
இப்படமும் இம்மாதம் வெளியாகும் என முன்பு அறிவித்திருந்தனர். ஆனால், வெளியீட்டை தற்போது மார்ச் மாதம் 27ஆம் தேதிக்குத் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
‘சித்தா’ அருண்குமாரைத் தொடர்ந்து ‘மாவீரன்’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வினுடன் இணைந்திருக்கிறார் விக்ரம். அவர் இயக்கும் படத்தில்தான் தற்போது நடித்து வருகிறார்.
விஜய்
விஜய்யின் கடைசி திரைப்படமான ‘தளபதி 69’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் தன்னுடைய கட்சிப் பணிகளையும் கவனித்து வருகிறார் விஜய்.
இந்நிலையில், இப்படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயர் வைத்துள்ளனர். படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியும் வெளியாகி உள்ளது.
ரஜினி
ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் படம் வெளியாகக் கூடும்.
இதனைத் தவிர, ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
இப்படங்களைத் தாண்டி கமல், சிம்பு நடிக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படமும் ஜூன் மாதம் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. கடந்தாண்டு சிம்புவின் எந்த திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகவில்லை.
‘நாயகன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கமலும் மணிரத்னமும் இணைந்திருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் இப்படத்திற்கு நிலவுகிறது.
மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாம். இந்தப் படமும் இவ்வாண்டு வெளியாகவிருக்கிறது. தவிர, சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார் எஸ்.கே.
எனவே, இந்த ஆண்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.