லண்டனில் உள்ள ஒரு நடிப்புப் பள்ளியில் படித்தபோது எதிர்கொண்டதை நடிகை சானியா ஐயப்பன் நினைவுகூர்ந்திருக்கிறார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘குயின்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் சானியா. இப்படத்திற்காக அவருக்கு ஃபிலிம் பேர் விருது வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, ‘பிரேதம் 2’ , ‘லூசிஃபர்’ , ‘சல்யூட்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் தமிழில் இறுகப்பற்று’ , ‘சொர்க்கவாசல்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், லண்டனில் உள்ள நடிப்புப் பள்ளி ஒன்றில் பயிற்சி மேற்கொண்டபோது தாம் எதிர்கொண்ட அனுபவம் குறித்து சானியா ஐயப்பன் பகிர்ந்துகொண்டார்.
“நான் லண்டனில் படிக்கச் சென்றேன். முதல் நாளிலிருந்தே பேராசிரியரின் நடத்தை சற்று எதிர்மறையாக இருந்ததை உணர்ந்தேன். ஆனால் நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வில்லை. நாள்கள் கடந்தன. ஆனால், யாரும் என்னிடம் பேச முன்வரவில்லை.
“ஒருநாள் குழு வேலைக்காக மாணவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது யாருமே என்னை குழுவில் சேர்ந்துகொள்ள விரும்பவில்லை. நான் பேசும் விதம் அதற்குக் காரணமாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் அது காரணமல்ல என்று பிறகு உணர்ந்தேன். தனிமையில் வாடினேன். இதனால், எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. என் அறையில் தனியாக அழுது கொண்டே இருந்தேன்’ என்றார் சானியா.
சானியா லண்டனில் படைப்பாற்றல் கலைகளுக்கான பல்கலைக்கழகத்தில் நடிப்பு மற்றும் செயல்திறன் பிரிவில் மூன்று ஆண்டு இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்தியா திரும்பினார்.

