சில ஆண்டுகளுக்கு முன்புவரை தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சதா.
சங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் ரெமோவின் காதலியாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
பிறகு வாய்ப்புகள் குறைந்ததாலோ என்னவோ, நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த சதா, இப்போது காட்டுயிர் புகைப்படக் கலைஞராக, வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலராக, விலங்குகள் நல உரிமை அமைப்பின் ஆதரவாளர் என சூழலியல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் அதி தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
“இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்களுக்கு அவ்வப்போது பயணம் மேற்கொள்கிறேன். காட்டுயிர்களின் வாழ்வியலைப் புகைப்படங்களாகக் காட்சிப்படுத்துவதில் தனி மகிழ்ச்சி கிடைக்கிறது,” என்கிறார் சதா.
‘சதா வைல்டு லைஃப் ஃபோட்டோகிராபி’, ‘சதா வைல்டு ஸ்டோரி’ என்ற பெயர்களில் சமூக ஊடகங்களில் சதா வெளியிடும் புகைப்படங்களும் காணொளிகளும் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வருகின்றன.
யானை, புலி, சிறுத்தை, ராஜ நாகம் போன்ற பாம்புகள், அரிய பறவைகள் ஆகியவற்றைப் படம்பிடிக்கிறார் சதா.
இவரை முன்மாதிரியாகக் கொண்டு கர்நாடகாவைச் சேர்ந்த பல இளம் பெண்கள் காட்டுயிர் புகைப்படக் கலைஞர்களாக மாறி வருகிறார்களாம்.
இப்பெண்களில் பலர், அண்மையில் அனைத்துலக காடுகள் தினத்தையொட்டி சதாவுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.