சென்னை: ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் பிரபல தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி (72 வயது) மரணமடைந்தார்.
சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற தமது சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் ஏராளமான வெற்றிப் படங்களைத் தயாரித்தவர் ஆர்.பி.சௌத்ரி.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவர் படங்களைத் தயாரித்ததுடன், பட விநியோகத்திலும் ஈடுபட்டிருந்தார்.
தமிழ்த் திரையுலகில் கடந்த, 1990களில் ஏராளமான புதிய இயக்குநர்களையும் நடிகர், நடிகைகளையும் அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
குறிப்பாக, இயக்குநர் விக்ரமன் அறிமுகமான ‘புதுவசந்தம்’, கே.எஸ்.ரவிகுமார் அறிமுகமான ‘புரியாத புதிர்’, சரத்குமார் நடித்த ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’, ‘சூர்ய வம்சம்’, விஜய் நடித்த ‘பூவே உனக்காக’, பாலசேகரன் அறிமுகமான ‘லவ் டுடே’ உள்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள தவெக தலைவர் விஜய்யின் திரைப் பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய படங்களில் ‘பூவே உனக்காக’ குறிப்பிடத்தக்கது.
தனது நிறுவனத்தின் நூறாவது திரைப்படத்தை விஜய் நடிப்பில் தயாரிக்க இருப்பதாக ஆர்.பி.சவுத்ரி அறிவித்திருந்தார். ஆனால் அது சாத்தியமாகவில்லை.
தற்போது, விஷால் இயக்கி, நடிக்கும் ‘மகுடம்’ சூப்பர் குட் பிலிம்ஸின் 99வது திரைப்படமாக உருவாகிறது.
தொடர்புடைய செய்திகள்
தனது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூருக்கு அவ்வப்போது சென்று வருவது ஆர்.பி.சவுத்ரியின் வழக்கம்.
அண்மையில் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்கச் சென்றிருந்தார். அங்கு அவர் பயணம் செய்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, ஒரு பாலத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. மறைந்த ஆர்.பி.சவுத்ரிக்கு சுரேஷ், ஜீவன், ஜித்தன் ரமேஷ், நடிகர் ஜீவா ஆகிய மகன்கள் உள்ளனர்.
அவரது மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

