‘மெட் காலா’ நிகவிச்சியில் பாலிவுட் கிங் ஷாருக் கானை ‘நீங்கள் யார்’ என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே ‘நான்தான் ஷாருக் கான்’ என்று கூறிய காணொளி வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘மெட் காலா 2025’ ஃபேஷன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
‘மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட்ஸ் காஸ்டியூம் இன்ஸ்டிடியூட்’ நிறுவனத்திற்கு நிதி திரட்டும் விதமாக ஆண்டுதோறும் அந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் உலகெங்கிலும் உள்ள திரைப் பிரபலங்கள் இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்பார்கள். வித்தியாசமான உடையில் தோன்றி கேரமா முன் நிற்பதே இந்நிகழ்ச்சியின் சாராம்சம்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ‘மெட் காலா ஃபேஷன்’ நிகழ்ச்சியில் இந்திய நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். மேலும், முதல் முறையாக பாலிவுட் கிங் ஷாருக் கானும் கலந்துகொண்டார்.
நவநாகரிகமான கறுப்பு நிற உடையில், கழுத்தில் ‘K’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட பெரிய சங்கிலியுடன் ஷாருக் கான் தனக்கே உரிய பாணியில் தோன்றினார்.
அந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு ஊடகங்கள் ஷாருக் கானை அடையாளம் காணத் தவறின. அப்போது செய்தியாளர் ஒருவர் ஷாருக் கானிடம் “நீங்கள் யார்?” எனக் கேட்டுள்ளார்.
அதற்கு ஷாருக் கான் சிரித்தவாறே, “நான்தான் ஷாருக் கான்,” என்று கூறியுள்ளார்.
அந்த உரையாடலின் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. இந்திய ரசிகர்கள் மிக உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் ஷாருக் கானை யார் என்று கேட்டவரை இணையவாசிகள் வலை வீசித் தேடி வருகின்றனர்.