புதிதாக உணவகத் தொழிலில் கால் பதித்துள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
“எங்கள் வட்டாரத்தில் பெரிய அளவிலான உணவகங்கள் இல்லை. ஆனால், நிறைய கல்லூரிகள் உள்ளன. மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தரமான உணவை வழங்கும் விதத்தில் உணவகத்தைத் திறந்துள்ளேன்.
முதலுக்கு மோசமில்லாத அளவில் எனது தொழிலும் ஓரளவுக்கு நல்லவிதமாகச் சென்று கொண்டுள்ளது. கற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற இடத்தில்தான் இன்னும் இருந்து வருகிறோம்.
எங்களது உணவகத் தொழில் இன்னும் நன்றாகச் சென்றது எனில், ஆங்காங்கே கிளைகளை விரிவுபடுத்தும் எண்ணமும் உள்ளது,” என்கிறார் பிரியா பவானி.
அண்மையில் வெளிவந்த ‘டிமான்டி காலனி-2’ படத்தில் நாயகனுக்கு ஈடான பாத்திரத்தை எனக்கும் இயக்குநர் அஜய் ஞானமுத்து கொடுத்திருந்தார். அவரை ஒரு சிறந்த பேய்க் கதை நிபுணர் என்றுகூட மனந்திறந்து பாராட்டலாம் என்கிறார்.
அருள்நிதி எதார்த்தமாகப் பழகுவார். எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டார். யாரையும் புண்படுத்தமாட்டார். எதையாவது பேசிவிட்டு நான் அப்படி பேசியிருக்கக் கூடாதல்லவா? என்று அப்பாவிபோல் கேட்பார்.
‘என்னைப் பற்றி ஏதாவது கிண்டலாகப் பேசவேண்டும் என்றால் என்னிடம் தனியாகப் பேசுங்கள். மைக் முன்னாடி, பொதுவெளியில் வேண்டாம் என்று சொல்வேன். மைக் முன்பாக நின்று விளையாட்டாக முகத்தை என் பக்கம் திருப்புவார். அந்தளவுக்கு நண்பர்போல் பழகுவார்.
எனது முழு முதல் பேய்ப் படம் என்றால் தெலுங்கில் நான் நடித்துவரும் ‘தாத்தா-2 ’ படத்தைக் கூறுவேன். பேயை கண்ணில் காட்டமாட்டார்கள். திகிலூட்டும் அனுபவம் வேறு விதமாக இருக்கும் என்கிறார் பிரியா பவானி.
தொடர்புடைய செய்திகள்
நாங்கள் பெரிய குடும்பம். என் பெரியப்பா பேய்க் கதை சொல்வார். நான் அவரை ‘பேய் பெரியப்பா’ என்றுதான் கூப்பிடுவேன் என்றும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
மலையாளப் படத்தில் நடிக்க ஆசையுள்ளது. இந்தியில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. நான் அந்தந்த மொழிகளில் நடிப்பதற்கு என்னை வசதியாக உணர்ந்தால்தான் நடிப்பேன். தெலுங்கில் இப்போதுதான் நடிக்க ஆரம்பித்துள்ளேன் என்பவர், அரசியலிலும் சரி, ஊடகங்களிலும் சரி மக்கள் நம்மை கண்காணிக்கிறார்கள் என்ற சிந்தனை இருக்கவேண்டும்.
அதாவது மக்கள் கையில் ஊடகம், ஊடகம் கையில் மக்கள் என கையோடு கைகோர்த்து நடக்கும்போதுதான் மக்கள் பிரச்சினைகளைச் சொல்லமுடியும். ஊடகம் சொல்ல விரும்பும் விஷயங்களையும் சொல்லமுடியும் என்று சொல்லும் பிரியா பவானி, செய்தி ஊடகமான பத்திரிகைத் துறையிலிருந்து காட்சி ஊடகமான திரைத் துறைக்கு வந்தவர்.
கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் மாறியுள்ள ஊடகத் துறை தனக்குப் பிடித்தமான துறை என்கிறார்.
எனக்குப் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். நாலைந்து நாள் விடுமுறை கிடைத்தால் நண்பர்களுடன் சுற்றுப் பயணம் செல்வேன். அம்மாவும் கூட ‘சும்மா வீட்டில் அடங்கியிருப்பதற்கு என்ன’ என்று கேட்பார்கள் என்று கூறுபவர், கூண்டுக்கிளிபோல் சிறைபட்டுக் கிடப்பதற்கு எனக்குப் பிடிக்காது. அதனால் சுதந்திரமாக சுற்றிவர விரும்புவேன் என்று மெல்ல புன்னகைக்கிறார்.
நயன்தாரா, திரிஷாபோல் பெண்களை மையப்படுத்தும் கதைகளில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. அதற்கான நேரம் சரியாக அமையும்போது செய்வேன்.
எத்தகைய சூழ்நிலையிலும் தம்மால் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடிக்க இயலாது என்று கூறும் பிரியா பவானி, கவர்ச்சி காட்டுவதற்கான கட்டாயம் ஏற்படும் சூழலில், அப்படிப்பட்ட வாய்ப்பை உதறித்தள்ளத் தயங்கப்போவதில்லை என்றும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னைத் தொடர்புகொண்டு பேசும் இயக்குநர்கள் பலரும் கவர்ச்சிகரமான வேடங்களில் நடிக்குமாறு கேட்கிறார்களாம். ஆனால், எத்தகைய சூழ்நிலையிலும் தம்மால் அதற்கு உடன்பட இயலாது என்று கறாராகச் சொல்லிவிடுகிறாராம் பிரியா.
“தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் கவர்ச்சியாக நடித்தால்தான் வாய்ப்பு கிட்டும், இல்லையெனில் மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்றும் பயமுறுத்துகின்றனர். அவர்களுக்கெல்லாம் எனது ஒரே பதில் என்னால் கவர்ச்சியாக நடிக்க இயலாது என்பதுதான்.
“என் முகத்துக்கும் உடற்கட்டுக்கும் கவர்ச்சிகரமான வேடங்கள் அறவே ஒத்துவராது. எனவேதான் இந்த விஷயத்தில் நான் தெளிவான மனநிலையில் உள்ளேன் என்றும் சொல்கிறார்.

