தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சண்டை, காதல், நகைச்சுவை நிறைந்த படம் ‘ரெட்ரோ’

3 mins read
9362e379-6dd3-431d-a9ed-0fb0406f1e09
சூர்யா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

‘ரெட்ரோ’ படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்க்காத சூர்யாவைப் பார்க்க முடியும் என்கிறார் அதன் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ்.

தோற்றத்தில் மட்டுமல்லாமல், அதிரடிச் சண்டைக் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் அசத்தலாக நடித்துள்ளாராம் சூர்யா.

அண்மையில் ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ‘ரெட்ரோ’ படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.

முதன்முறையாக சூர்யாவை இயக்குவது உற்சாகமான அனுபவமாக உள்ளதாம்.

“இயக்குநர்களுக்கு எவையெல்லாம் தேவைப்படுமோ, அவர்களின் விருப்பம் என்னவோ, அதை நன்கு புரிந்துகொண்டு பிரமாதமாக தன் திறமையை வெளிப்படுத்தக் கூடியவர் சூர்யா. அவரது இந்தத் திறமையை ‘ரெட்ரோ’வுக்கு நேரில் பார்த்தபோது இன்னும் ஆச்சரியமாக இருந்தது.

“ஒரு புதுமுக நடிகரைப் போல் இப்போதும்கூட நடிப்பை மிகவும் நுணுக்கமாகவும் அக்கறையாகவும் எடுத்துக்கொள்கிறார். நான் இதுவரை இயக்கிய படங்களில் சண்டைகள் அதிகமாகவும் காதல் காட்சிகள் குறைவாகவும் இருக்கும். ஆனால் ‘ரெட்ரோ’வை காதல் கதையாகக் கையில் எடுத்திருக்கிறேன்,” என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

கடந்த 1990களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்புதான் ‘ரெட்ரோ’வின் கதை. காதல், நகைச்சுவை, அதிரடிச் சண்டைகள் மூன்றும் கலந்த கலவையாக இருந்தாலும் இசைக்கும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் அமைந்திருக்கும் என்பது இயக்குநர் கொடுக்கும் உத்தரவாதம்.

ரெட்ரோ’ என்ற தலைப்பு குறித்து?

இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே சூர்யாவை வைத்து வேறொரு கதையைப் படமாக்க இருந்தாராம் கார்த்திக் சுப்புராஜ்.

சூர்யாவுக்கும் கதை பிடித்துப் போயிருந்த நிலையில், அப்படத்துக்கு அதிக உழைப்பு தேவைப்பட்டதாலும் அச்சமயம் இருவருமே கைவசம் வேறு சில படங்களை வைத்திருந்ததாலும் இணைய முடியாமல் போனதாம்.

“பிறகு சூர்யாவே திடீரெனத் தொடர்புகொண்டு வேறு கதை இருக்கிறதா என விசாரிக்க, நான் ‘ரெட்ரோ’ கதையைச் சொல்லி அவருக்கும் பிடித்துப்போக, உடனே படப்்பிடிப்புக்குக் கிளம்பிவிட்டோம்.

“குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தைக் குறிப்பதுதான் ‘ரெட்ரோ’. மேலும் 1990களில் நடக்கும் கதை என்பதாலும் பொருத்தமான தலைப்பாக இருந்தது,” என விளக்கம் அளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

நாசர், பிரகாஷ்ராஜ், ஜெயராம், மலையாளத்தின் ஜோஜு ஜார்ஜ், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸி’ல் ஷட்டானியாக மிரட்டிய விது, ‘ரசவாதி’யில் வில்லனாக அசத்திய சுஜித், சிங்கம்புலி, கருணாகரன், அவினாஷ் என கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் அனுபவமிக்க நடிகர்களை நடிக்க வைத்துள்ளனர்.

இயக்குநரின் தந்தையும் சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார். அவரையும்கூட நடிப்புத் தேர்வு வைத்துத்தான் தேர்வு செய்திருக்கி்றார்கள்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

‘‘கதைப்படி, சூர்யாவின் பெயர் பாரிவேல் கண்ணன். அவர் வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள், அவர் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை. சூர்யா சார், பூஜா ஹெக்டே இருவருக்கும் இடையேயான காதல் மிக அழகானது.

“சூர்யா மிகவும் கோபக்காரர். அதற்கான காரணம் என்ன, தன் தந்தையுடன் சேர்ந்து அடிதடிகளில் ஈடுபட மாட்டேன் என பூஜாவிடன் அளித்த உறுதிமொழியை அவரால் காப்பாற்ற முடிந்ததா என்பதெல்லாம் மீதிக்கதை.

``பூஜா ஹெக்டே இதற்கு முன்பு இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடித்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காதலர்களுக்கு இடையே உள்ள ஆழமான பிணைப்பை உணர்த்தும் கதையில் மிக இயல்பாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.

“பூஜா இதற்கு முந்திய படங்களில் தன் திறமையை நிரூபித்தவர். இதில் ருக்மிணி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு நிச்சயம் பேசப்படும்,” என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

குறிப்புச் சொற்கள்