சூர்யா நடித்திருந்த ‘ரெட்ரோ’ ஐந்து நாள்களில் ரூ.100 கோடி வசூலித்திருப்பது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சூர்யாவின் நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை.
இறுதியாக அவரது நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து தோல்வியடைந்தது. எனவே சூர்யாவிற்கு உடனடியாக ஒரு வெற்றிப்படம் தேவைப்பட்டது. அவர் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் கட்டாயமும் ஏற்பட்டது.
இந்தச் சமயத்தில்தான் சூர்யா எதிர்பார்த்த வெற்றியை ‘ரெட்ரோ’ அவருக்குக் கொடுத்துள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் ஆரம்பத்தில் சற்று கலவையான விமர்சனங்களைத்தான் பெற்றது. இருந்தாலும் சூர்யா ரசிகர்களுக்கு முழு திருப்தியை கொடுத்த படமாக ‘ரெட்ரோ’ அமைந்தது.
கடந்த ஐந்து நாள்களில் ‘ரெட்ரோ’ திரைப்படம் உலகளவில் ரூ.நூறு கோடிக்கு மேல் வசூலித்துள்ளது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மேலும், படத்திற்கு தற்பொழுது நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவதால் இனி வரும் நாள்களில் திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

