எனக்கும் சூர்யாவுக்கும் மாறுபட்ட படம் ‘ரெட்ரோ’: இயக்குநர்

1 mins read
ad1f9771-d79f-4ea7-b3e6-fdd1a7e6f12a
சூர்யாவுடன் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். - படம்: சமூக ஊடகம்

சூர்யா நடிப்பில் மே 1ஆம் தேதி வெளிவரவுள்ளளது ‘ரெட்ரோ’ திரைப்படம். ரெட்ரோ என்பது ஒரு காலகட்டத்தை குறிக்கும் சொல் என அதன் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

இந்தப் படத்தின் கதையும் 1990களில் நடக்கிற ஒரு காதல் கதை என்பதால் இப்படத்திற்கு இந்தத் தலைப்பு வைத்துள்ளதாக அவர் விளக்கமளித்தார்.

“இது எனது வழக்கமான ‘கேங்ஸ்டர்’ பாணியிலான படமன்று. அழகான காதல் பாணியிலான படம். ஆக்‌ஷன் காட்சிகளும் மகிழ்வான தருணங்களும் உண்டு,” என்றார் கார்த்திக்.

படத்தில் ‘பாரிவேல் கண்ணன்’ எனும் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கிறார். கதைக்களம் பல இடங்களில் இடம்பெறுவதால் பல தோற்றங்களில் சூர்யா வலம் வருகிறார்.

கோபம், அடிதடி என இலக்கு இல்லாமல் வாழும் இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பெண் வரும்போது, அந்தப் பெண்ணின் பொருட்டு அவன் தன்னை மாற்றிக்கொள்வதும் அந்தப் பெண்ணின் பிரச்சினையைத் தீர்த்துவைப்பது மாதிரியான கதை ‘ரெட்ரோ’. இப்படத்தில் நாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரத்தின் பெயர் ‘ருக்மணி’.

படத்தின் பெரும்பாலான கதை அந்தமான் தீவில் நடக்கிறது.

“தினமும் பல மைல் தூரம் படகில் சென்று ஒரு தனித் தீவில் படம் ஆக்கினோம். படப்பிடிப்பின் ஒரு பகுதி வாரணாசியிலும் நடந்துள்ளது. இப்படம் நிச்சயம் என்னுடைய மற்றும் சூர்யாவின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும்,” என்றார் கார்த்திக்.

குறிப்புச் சொற்கள்