கதாநாயகனாக நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் வில்லனாக திரையில் தோன்றி பயமுறுத்தும் திறமையும் துணிச்சலும் அனைவருக்கும் வந்துவிடாது.
இன்றைய நடிகர்களில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற இத்தகைய திறமைசாலிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வரிசையில் இடம்பிடித்துள்ளார் அருண் விஜய்.
அண்மையில் வெளியான ‘இட்லி கடை’ படத்தில் முரட்டுக் கதாபாத்திரத்தில் நடித்து, தனுஷ் ரசிகர்கள் மூலம் சமூக ஊடகங்களில் திட்டு வாங்கியவர், அடுத்து கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தலைப்பில் ‘தல’ என்ற வார்த்தை இடம்பெற்றால், அதற்கென ஒருவித சக்தி, வேகம் உருவாகும் என இயக்குநர் கருத, தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் பிடித்துப்போக, நாயகனும் பச்சைக்கொடி காட்டினாராம்.
உணர்வுபூர்வமான காட்சிகள், காதல், அடிதடி, நகைச்சுவை என அனைத்துவிதமான பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்ட படமாக உருவாகியுள்ளது ‘ரெட்ட தல’. இதைத்தான் முன்பெல்லாம் முழுமையான திரைப்படம் என்பார்கள்.
“எல்லாரும் வயது வித்தியாசமின்றி திரையரங்குக்கு சென்று பார்க்கும் படங்கள் முன்பு அதிகமாக இருந்தன. நீண்ட நாள்களுக்குப் பிறகு அதுபோன்ற படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கிரிஷ் திருக்குமரன்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசின் சீடர்களில் இவரும் ஒருவர். இவரது முதல் படம் ‘மான் கராத்தே’.
நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக ஏதோ ஒரு விளைவு இருக்கும். அந்த விளைவு நமக்கு நன்மை செய்யும், அல்லது வாழ்க்கையைப் புரட்டிப் போடும்.
தொடர்புடைய செய்திகள்
இப்படத்தின் நாயகன் தன் பிரியத்திற்குரிய காதலிக்குப் பிடித்திருந்தால் எதையும் செய்வான். இருவரும் சேர்ந்து பயணம் செய்யும்போது சில விஷயங்கள் நடக்கின்றன. அவை இருவரையும் எங்கு கொண்டுபோய் விடுகின்றன என்பதுதான் கதைச்சுருக்கம்.
ஷேக்ஸ்பியரின் ‘மேக்பத்’ நாடகத்தில் ‘முறைகேடான ஒரு லட்சியம் உங்களை அழிவுக்குக் கொண்டு போய் நிறுத்தும்’ என்று குறிப்பிட்டிருப்பார். அதுதான் இப்படத்தின் கருவாம்.
“யாரும் பார்க்க மாட்டார்கள் என்று நம்பி சிலர் ஒரே ஒரு தவறு செய்வார்கள். அந்தத் தவற்றை மறைக்கப் பார்க்கும்போது, அதுவே அடுத்தடுத்த தவறுகளுக்கு அழைத்துப் போகும்.
“தவறு செய்யாத மனிதர்கள் இருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தவறு செய்யும்போது யார் பார்க்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. யாரோ நம்மைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
“அது கடவுளாக, காற்றாக என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆசைப்பட்ட பெண்ணுக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்று செயல்படுகிறவன் கடைசியில், அந்தப் பெண் அதற்குத் தகுதியானவள்தானா என்று யோசிக்கிறான். அது அவனுள் மாற்றத்தை ஏற்படுத்தும்.
“நம் வாழ்க்கையை நாம் மட்டுமே கட்டுப்படுத்துகிறோம் என்றுதான் பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். ஆனால் நமக்குத் தெரியாத வேறு சில அம்சங்களும் உள்ளன,” என நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார் கிரிஷ்.
“படத்தின் முடிவில் காதல், பணம் ஆகியவற்றில் எது உண்மையாக ஒரு மனிதனை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் ஏற்படுமாம்.
அதற்கான விடையைத் தேடியபோது ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கதேவைப்படும் ஆர்வம் வந்தது என்று கிரிஷ் கூறியுள்ளார்.
இதோ முழுப் படமும் முடிந்து வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.
“இதில் சித்தி இட்னானி, தான்யா என அருண் விஜய்க்கு இரண்டு ஜோடிகள். கதைப்படி அருண் விஜய்யும் சித்தி இட்னானியும் வெளிப்படுத்திய நடிப்பு அசாதாரணமானது,” என்று பேட்டியில் பாராட்டி உள்ளார் கிரிஷ்.

