நட்டி நட்ராஜ், அருண் பாண்டியன் இணைந்து முதன்மைக் கதாமாந்தர்களாக நடித்துள்ள படம் ‘ரைட்’.
‘பிக் பாஸ்’ அக்ஷரா ரெட்டி, வினோதினி, மூணாறு ரமேஷ், டைகர் தங்கதுரை, உதய் மகேஷ், முத்துராமன், ரோஷன் உதயகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘வீரம்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவினா பார்கவி, இதில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். நடிகை அனுபமா குமாரின் மகன் ஆதித்யா ஷிவக் அறிமுகமாகிறார்.
சுப்பிரமணியன் ரமேஷ்குமார் இயக்கியுள்ளார். ஆர்டிஎஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில், திருமால் லட்சுமணன், டி ஷியாமளா தயாரித்துள்ளனர். செப்டம்பர் 26ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
“இது ஒரு சுவாரசியமான படம். இதன் இயக்குநர் ரமேஷ் எனக்கு உதவியாளராக இருந்தவர். அவர் கதை சொன்னபோதே யார் யாரெல்லாம் நடிக்க வேண்டும் என எழுதி வைத்திருந்தார். அருண் பாண்டியன் ஓர் இணை இயக்குநரைப் போல் இதில் வேலை செய்தார். சமூக அக்கறை மிக்க ஒரு விஷயத்தை இயக்குநர் சொல்லியுள்ளார்,” என்று நட்டி நட்ராஜ் தெரிவித்தார்.
“எளிய மக்களுக்குப் பிரச்சினை என்றால் காவல் நிலையத்துக்குச் சென்று உதவி கேட்பார்கள். அந்தக் காவல் நிலையத்துக்கே பிரச்சினை என்றால் என்னவாகும் என்பதுதான் இப்படத்தின் மையக் கரு” என்றார் படத்தின் இயக்குநர் சுப்பிரமணியன் ரமேஷ்குமார்.