‘தண்டகாரண்யம்’ என்ற புதுப் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரித்விகா.
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் நடிகர்கள் கலையரசன், ‘அட்டகத்தி’ தினேஷ், வின்சு, சபீர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கான விளம்பர நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகைகள் ரித்விகா, வின்சு ரேச்சல் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷனில் தயாராகியுள்ள படம் இது. செப்டம்பர் 19ஆம் தேதி திரைகாணும் என முன்பே எதிர்பார்க்கப்பட்டது. சரியான நேரத்தில் வெளியாகி உள்ளது.
விளம்பர நிகழ்வில் முதலில் பேசிய நடிகை ரித்விகா, இயக்குநர் அதியன் ஆதிரையின் இயக்கத்திலும் நீலம் நிறுவனத்திலும் தாம் நடிக்கும் இரண்டாவது படம் இது என்றார்.
தொடர்ந்து தன் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்காக இருதரப்புக்கும் நன்றி தெரிவித்த அவர், ‘தண்டகாரண்யம்’ புதிய களம், புதிய கதை, சொல்லப்படாத கதாபாத்திரங்களுடன் உருவாகியுள்ள தரமான படைப்பு என்றார்.
“இயக்குநர் தனது விருப்பத்தின் அடிப்படையில், எந்த சமரசமுமின்றி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
“ உதவி இயக்குநர்கள் இல்லை என்றால் இந்தப் படமே இல்லை. காரணம், கதைக்களம் அவ்வளவு சிரமமான இடம்.
தொடர்புடைய செய்திகள்
“நல்ல படத்துக்கு எப்போதும் உங்களிடமிருந்து முழுமையான ஆதரவு வரும் என்பது எங்களுக்குத் தெரியும். அதன் அடிப்படையில் இந்தப் படத்துக்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார் ரித்விகா.
“அடுத்து பேசிய வின்சு ரேச்சல், தனது முதல் படமே இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் என்றார்.
“என் தாய்மொழி மலையாளம் என்பதால் எனக்கு தமிழ் பெரிதாகத் தெரியாது. அப்போதே என்னால் முடிந்தவரை தமிழைக் கற்று நடிக்கத் தொடங்கினேன். அதன் பிறகு மூன்று, நான்கு படங்கள் நடித்துவிட்டேன்.
“அப்போதுதான் இந்தப் படத்துக்கான தேர்வு நடந்தது. அதில் நான் சரியாக நடிக்கவில்லை. என் தமிழும் சரியாக இல்லை. இந்தப் படத்தில் வரும் கிராமத்துத் தமிழும் மிகவும் முக்கியம். இருந்தாலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்.
“மாடலிங் துறையில் இருந்ததால் எனக்கு கேமரா முன்பு இருப்பது பெரிய சிக்கல் இல்லை. ஆனால் இயக்குநரும் தயாரிப்பாளரும் என் மீது கொண்டிருந்த நம்பிக்கை மிக முக்கியம்,” என்றார்.
படத்தில் ஒப்பந்தமான நாள் முதல், மூன்று மாதங்கள் தொடர்ந்து இயக்குநர் அலுவலகம் சென்று தமிழில் பேசக் கற்றுக்கொண்டாராம்.
“படத்தின் அனைத்து வசனங்களையும் மனப்பாடம் செய்து கொண்டுதான் படப்பிடிப்புக்கே சென்றேன்.
“எனக்கு நம்பிக்கையூட்டிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த, மனத்துக்கு நெருக்கமான படம்,” என்றும் குறிப்பிட்டார் வின்சு ரேச்சல்.