தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அஜித்தை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கும் ஆலுமா டோலுமா பாடலாசிரியர் ரோகேஷ்

2 mins read
917cc5cb-b883-46d4-9dbb-aa1b17e302d1
ரோகேஷ். - படம்: ஊடகம்
multi-img1 of 2

இளம் பாடலாசிரியர் ரோகேஷ் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்.

இதற்கு முன் அஜித்துக்கு `ஆலுமா டோலுமா’ என்ற வெற்றிப் பாடலைக் கொடுத்தவர், தற்போது `குட் பேட் அக்லி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜிபியு மாமே’ என்ற பாடலை எழுதி, மீண்டும் அஜித் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

`குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது சமூக ஊடகங்களில் ‘ஜிபியு மாமே’ பாடல் குறித்துத்தான் ரசிகர்கள் பரவலாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

“மீண்டும் அஜித்துக்காக பாடல் எழுதும் வாய்ப்பு அமைந்ததும் அதற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பும் மிகுந்த உற்சாகம் அளிக்கிறது.

“படக்குழுவில் இருந்து ‘ஆலுமா டோலுமா’ போல் ஒரு பாடல் வேண்டும் என்றுதான் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. ‘வேதாளம்’ படம் போலவே இதிலும் அஜித் குண்டர் கும்பலைச் சேர்ந்தவராக நடித்துள்ளார்.

“அதனால் பாடலை எழுதும்போதே தேவையான வரிகளும் அம்சங்களும் மனதில் தோன்றியபடியே இருந்தன. அதனால் எழுத வசதியாக இருந்தது.

“மேலும், படக்குழுவில் இருந்து, ‘தீனா’, ‘பில்லா’, ‘மங்காத்தா’ என அஜித்தின் முந்தையப் படங்களின் தலைப்புகளைப் பாடல் வரிகளில் பயன்படுத்தலாம் எனக் கூறியதுடன், மேலும் சில ஆலோசனைகளும் வழங்கினர்.

“இயக்குநர் ஆதிக்கும் அஜித்துக்கு மிகப்பெரிய ரசிகர். இதுவரை ‘ஆலுமா டோலுமா’ பாடல்தான் எனக்கான அடையாளமாக இருந்து வருகிறது. பலருக்கும் நான்தான் இந்தப் பாடலை எழுதினேன் என்பது ஆச்சரியம் தரும் தகவலாகவே உள்ளது,” என்று சொல்லும் ரோகேஷ், அஜித்தை ஒருமுறைகூட நேரில் சந்தித்ததில்லையாம்.

அந்த வாய்ப்புக்காக காத்திருப்பதாகச் சொல்கிறார்.

“நான் குடியிருக்கும் பகுதியில் பலர் அஜித்தின் தீவிர ரசிகர்கள். அட்டகாசம் படத்தைப் பார்த்த பிறகு, நானும் அவரது ரசிகராக மாறிவிட்டேன்.

“அஜித்துக்கு என்னுடைய பாடல்கள் மிகவும் பிடிக்குமாம். அவற்றைக் கேட்டு அவர் எந்த அளவுக்கு மகிழ்ந்துபோவார் என்பதை என் நண்பர்கள் கூறும்போது உற்சாகமாக இருக்கும்,” என்கிறார் பாடலாசிரியர் ரோகேஷ்.

குறிப்புச் சொற்கள்