புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகளும் பி.ஏ. கல்லூரி மாணவியுமான ரேஷ்மி சவீதாவுக்கு வருமான வரித்துறை அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், அவர் ரூ.20.98 கோடி வருவாயை மறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த ரேஷ்மி, “எனது வாழ்நாளில் ரூ.20,000 பணத்தைக்கூட மொத்தமாகப் பார்த்ததில்லை.
“எனது ஆதார், பான் அட்டைகளைப் பயன்படுத்தி, டெல்லி புராரி பகுதியில் ‘ஆர்.எஸ். என்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
“2025 ஜனவரியில் தொடங்கப்பட்டு மே மாதத்தில் மூடப்பட்ட அந்த நிறுவனம், என் பெயரில் ரூ.20.98 கோடிக்கு பொருள்கள் வாங்கி மோசடி செய்துள்ளது.
“அந்த நிறுவனத்தின் வரி ஏய்ப்பிற்காகவே தற்போது எனக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது,” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி ரேஷ்மி, உள்ளூர் வழக்கறிஞரின் உதவியோடு வருமான வரித்துறையிலும் உத்தரப் பிரதேச காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.
ஏழை மாணவியின் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த இணைய மோசடி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

