சென்னை போரூரில் 11 ஆண்டுகளாக வசித்து வரும் பழம்பெரும் நடிகை ராதா, தம் சகோதரி அம்பிகா மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக அவர் அளித்துள்ள புகாரில், தமது சகோதரர் மல்லிகார்ஜுனாவும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
போரூரில் ஏஆர்எஸ் கார்டன் என்ற தொழில் நிறுவனத்தை நடத்தி வரும் ராதா, அவசரப் பயன்பாட்டிற்காக கையெழுத்திடப்பட்ட காசோலைகளைத் தம் வீட்டில் வைத்திருப்பது வழக்கம்.
இந்நிலையில், களவுபோன காசோலைகள் குறித்து அவர் புகார் அளித்துள்ளார்.
“கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வங்கியில் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் எனக்கு சொந்தமான ஐந்து காசோலைகளை, ஏறக்குறைய ரூ.46 கோடியை அக்கா அம்பிகா தனது பெயரில் வங்கியில் செலுத்துவதற்கு முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
“இதை அறிந்ததும் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அந்தப் பணப் பரிமாற்றத்தை நிறுத்தும்படி வங்கி அதிகாரியிடம் சொல்லிவிட்டேன்.
“இதுபற்றி விசாரித்தபோது அந்தக் காசோலையைப் பூர்த்தி செய்தது எனது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் என்பது தெரியவந்தது. ஏற்கெனவே அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.
“சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள எனது வீட்டின் தரைத்தளத்தில் அக்கா அம்பிகா உள்ளார். நான் இல்லாத நேரத்தில் மேல் தளத்தில் உள்ள எனது வீட்டிற்குள் சென்று காசோலையைத் திருடி பண மோசடியில் ஈடுபட இருவரும் முயன்றுள்ளனர். அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ராதா புகாரில் தெரிவித்துள்ளார்.
“நான் மிகவும் நம்பிய எனது சகோதரியும் சகோதரரும் இப்படி என்னிடமே மோசடியில் ஈடுபட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது,” என ராதா ஆதங்கப்பட்டுள்ளார்.
80களில் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகில் கனவுக் கன்னிகளாகத் திகழ்ந்தவர்கள் சகோதரிகளான அம்பிகா, ராதா. சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட உச்ச நடிகர்களின் படங்களில் நடித்துள்ளனர்.
ஒருகட்டத்திற்குப் பின்னர் திரையுலகில் இருந்து விலகிய ராதா தனது கணவருடன் இணைந்து ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இறங்கினார். நடிகை அம்பிகா அவ்வப்போது படங்களில் நடித்து வந்தார்.
