அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ருக்மிணி வசந்த் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சிம்பு நடிப்பில் ஆக அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக இது இருக்குமாம்.
ருக்மிணி வசந்த் நாயகியாக ஒப்பந்தமான தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேபோல் இப்படத்தில் சிம்புவின் நண்பராக சந்தானம் நடிப்பதும் உறுதியாகி உள்ளது. எனினும், அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
அனைத்து விவரங்களையும் ஒரே சமயத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
சிம்புவுடனான நட்புக்காக மட்டுமே இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் சந்தானம். இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைய உள்ளனர்.
இதற்காக சந்தானத்துக்கு அவர் எதிர்பார்த்ததைவிட பெரிய தொகை ஊதியமாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ படத்தை தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். அதற்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் வெற்றிமாறன்.
தற்போது சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இப்படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி, பிரியங்கா மோகன், அஸ்வத் மாரிமுத்து உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தாணு தயாரிக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
வெற்றி மாறன் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் ‘வடசென்னை’. அந்தக் கதை நிகழ்ந்த காலகட்டத்திலேயே ‘அரசன்’ படத்தின் கதையும் இடம்பெறுவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளார் வெற்றிமாறன்.
இதனால் ‘அரசன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

