உண்மைக்கு நெருக்கமான படமாக உருவாகியுள்ளது ‘சப்தம்’

உண்மைக்கு நெருக்கமான படமாக உருவாகியுள்ளது ‘சப்தம்’

2 mins read
efaa2e8b-7464-46fb-ae25-72cedd0473b8
‘சப்தம்’ படத்தில் ஆதி, லட்சுமி மேனன். - படம்: ஊடகம்

தமிழ் சினிமா மீண்டும் பேய்க்கதைகளின் தயவை நாடத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகிறது ‘சப்தம்’ திரைப்படம்.

ஏற்கெனவே ‘ஈரம்’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் இந்தப் புதுப்படம் தன்னை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்கிறார்.

இவர் இயக்குநர் சங்கரின் சீடர் என்பதை பலர் மறந்திருக்கக்கூடும்.

“மீண்டும் ஏன் ஒரு பேய்ப்படம் என்று பலரும் கேட்கிறார்கள். ரசனை என்பது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். கடந்த 20 ஆண்டுகளில் கதையிலிருந்து இசை வரை எல்லாம் வேறுவிதமாக மாறிவிட்டன.

“நான் யோசிக்கும் கதைகள் இந்த மண்ணில் நடப்பதாக இருக்கவேண்டும். அதன் அனுபவச் சாயலை எல்லாரும் உணர்ந்திருக்க வேண்டும். அடுத்த படத்தை உருவாக்கும்போது தொழில்நுட்ப ரீதியிலும் கதை, திரைக்கதையிலும் அடுத்த கட்டத்துக்குப் போவதுபோல் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டுமென ஆசைப்படுவேன்.

“இந்த ‘சப்தம்’ படத்தை உண்மைக்கு மிக நெருக்கமான படைப்பாக உருவாக்கியுள்ளேன்,” என்கிறார் அறிவழகன்.

‘ஈரம்’ படத்தில் தண்ணீர் மூலம் பேய் வருவதை உணர்வுபூர்வமாக விவரித்தது போன்று சத்தத்தை மையமாக வைத்து அடுத்த படத்தை உருவாக்கியுள்ளாராம். ‘ஈரம்’ படத்தில் இருந்த உணர்வுகள் ‘சப்தம்’ படத்திலும் இருக்கும் என்கிறார்.

“வெறும் பேய்ப்படமாக இல்லாமல் அதையும் கடந்து நான் ஒரு நல்ல கதை சொல்லியாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ளேன்.

“பேய்க்கதையை வெறும் கதாபாத்திரங்களின் உதவியோடு மட்டும் சொல்லிவிட முடியாது. தொழில்நுட்ப ரீதியில் சில அம்சங்களைக் கதைக்குள் புகுத்த வேண்டி இருக்கும். ஒலி, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவை புது மாதிரியாக இருக்கவேண்டும்.

“இந்தப் படத்தைப் பார்க்கும்போது உங்களால் நான் சொல்வதை உணர முடியும்,” என்கிறார் அறிவழகன்.

‘சப்தம்’ படத்தில் ஆதி, லட்சுமி மேனன் ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், லைலா, எம்.எஸ்.பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

“உலகப் புகழ்பெற்ற இயக்குநர் சத்தியஜித்ரே, சரியான நடிகர்கள் அமையும்போது இயக்குநரின் பாதி வேலை முடிந்து விடுகிறது என்றார். இப்படத்திற்காக தேர்வான நடிகர்களின் பங்களிப்பை பார்த்தபோது எனக்கு சத்தியஜித்ரேயின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன,” என்கிறார் இயக்குநர் அறிவழகன்.

குறிப்புச் சொற்கள்