கௌதம் கிருஷ்ணா இயக்கியுள்ள ‘யோகி டா’ படத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் சாய் தன்ஷிகா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் அவர் தனி நாயகியாக நடித்துள்ளார்.
மேலும், சாயாஜி ஷிண்டே, மறைந்த நடிகர் மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரை ஏற்றுள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கௌதம் கிருஷ்ணா.
தீபக் தேவ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், சாய் தன்ஷிகாவுக்கு காவல் ஆய்வாளர் கதாபாத்திரம் அமைந்துள்ளது.
கதைப்படி, இவர் ஆய்வாளராக உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு கொலை நடக்கிறது. ஆனால், கொலையுண்டவரின் குடும்பத்தாரோ அவர் தம் உயிரை தாமே மாய்த்துக்கொண்டதாக மாற்ற முயற்சி செய்கின்றனர்.
எனினும், கொலை என்பதை நிரூபித்து, குற்றவாளியைக் கைது செய்கிறார் சாய் தன்ஷிகா.
“ஆனால், குற்றவாளியை விடுவிக்கச் சொல்லி பல தரப்பில் இருந்தும் அவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. அதற்கு மறுப்பதால், இதைவிட மோசமான பகுதிக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் மீண்டும் அவரை இடமாற்றம் செய்கிறார்கள்.
தொடர்புடைய செய்திகள்
“குறுகிய காலத்திலேயே அதிக முறை இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரி என்ற பெயரும் அவருக்குக் கிடைக்கிறது. இதுபோன்ற சூழலில் எதிர்பாராத அதிர்ச்சித் திருப்பங்களை எதிர்கொள்கிறார் சாய் தன்ஷிகா.
“அவற்றை அவரால் சமாளிக்க முடிந்ததா, இறுதியில் அவர் வெற்றி பெற்றாரா என்பதுதான் கதை,” என்கிறார் இயக்குநர் கௌதம் கிருஷ்ணா.
“இந்தக் கதையை இயக்குநர் விவரித்த விதமும் கதை நாயகியின் கதாபாத்திரத்தின் தன்மையும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
“எத்தனை பேர் எதிர்த்தாலும் உண்மை உண்மைதான். அதேபோல் எத்தனை பேர் ஆதரித்தாலும் தவறு தவறுதான்.
“மேலும், ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் என்பதும் என்னைக் கூடுதலாக கவர்ந்த அம்சம். அதனால் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தேன்,” என்கிறார் சாய் தன்ஷிகா.

