படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள் தன்னைக் கட்டிப்பிடித்து அழுது தனது நடிப்பிற்கு அங்கீகாரம் கொடுத்ததாக உருக்கத்துடன் கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.
‘பிரேமம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற சாய் பல்லவி, கடந்த 10 ஆண்டுகளில் அந்தப் புகழால் எத்தனையோ படங்களில் நடித்திருக்க முடியும். ஆனால், தனக்குப் பிடித்த படங்களை மட்டுமே தேர்வு செய்து, குறைவான எண்ணிக்கையிலேயே படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அண்மையில் வெளியான ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்தப் படத்திற்காக இவருக்கு தேசிய விருது கூட கிடைக்கும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய நடிகை சாய் பல்லவி, “இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் நிறைய பேருடைய உழைப்பு இருக்கிறது. விமர்சனங்கள் அழகாக எழுதி இருக்கிறார்கள்.
“ஒரு படத்தைப் பார்க்கும்போது இந்தக் காட்சி நன்றாக இருக்கிறது. அந்தக் காட்சி நன்றாக இருக்கிறது என்று படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்வார்கள். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் என்னிடம் எதுவும் பேசவில்லை. என்னைக் கட்டிப்பிடித்து அழுதார்கள்.
“அதுவே நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்பதற்கு சாட்சியாக அமைந்தது. அப்படி ஒரு படத்தில் திறமையைக் காட்டக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன்.
“இந்து மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்த இயக்குநர் ராஜ்குமாருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இயக்குநரின் ‘ரங்கூன்’ படம் கெளதம் கார்த்தியின் திரை வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதுபோல இப்போது சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகும் படமாக ‘அமரன்’ படம் அமைந்திருக்கிறது. அதுபோல எனக்கும் ஒரு நல்ல படம் கொடுக்கவேண்டும் என்று ராஜ்குமாரிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்,” என்றார் சாய் பல்லவி.
இந்நிலையில் நடிகர் சிவகுமார் அவரது மகன் சூர்யா, சூர்யாவின் மனைவி ஜோதிகா என மூவரும் ‘அமரன்’ படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத்தொடர்ந்து ஜோதிகா தனியாக “ஜெய்பீம்’ படத்திற்குப் பிறகு தமிழில் ஒரு தரமான படமாக ‘அமரன்’ படம் வெளியாகி இருக்கிறது என்று ஒரு பதிவை தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில் சிவகார்த்திகேயன் இந்தளவுக்கு கஷ்டப்பட்டு நடிப்பார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை.
“ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் ஒரு வைரத்தை உருவாக்கி இருக்கிறீர்கள். சாய் பல்லவி என்னவொரு நடிகை. அந்த கடைசி பத்து நிமிடக் காட்சிகளில் என் இதயத்தையும் மூச்சையையும் அப்படியே நிறுத்திவிட்டார்கள்.
“மேஜர் முகுந்த் நம்முடனே இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார். ரெபேக்கா வர்கீஸின் தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை. மேலும், இந்த வைரத்தை ரசிகர்கள் மிஸ் செய்துவிடக் கூடாது. படத்தைப் பார்க்காதவர்கள் விரைவில் திரையரங்குக்குச் சென்று பார்த்துவிடுங்கள் என்றும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவருடைய பதிவைப் பலரும் விருப்பம் தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர்.
சாய் பல்லவி ‘தண்டேல்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை சந்து மொண்டேடி இயக்கியுள்ளார். படத்தில் சாய் பல்லவி, நாக சைதன்யா மீனவர்களாக நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இயக்குநர் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்ற ‘கார்த்திகேயா 2’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.