தீபாவளியன்று வெளியான ‘அமரன்’ படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார்.
‘அமரன்’ படம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 27) தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முன்பு கேரள மாநிலத்தின் கொச்சியில் படக்குழுவினர் படத்தைப் பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது பேசிய சாய்பல்லவி மலையாளத்தில் பேச பயமாக இருப்பதாகக் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மலையாளத்தில் பேச எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. ஏனெனில், ஒருவேளை நான் தெரியாமல் ஏதாவது தவறாகப் பேசிவிட்டால் அது உங்களைக் காயப்படுத்திவிடுமோ என்ற பயம் உள்ளது. நான் எப்பொழுதும் சரியாகப் பேசவேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன்,” என்றார்.
கடந்த 2013ல் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. தமிழில் ‘தியா’, தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’, சூர்யா ஜோடியாக ‘என்.ஜி.கே.’ படங்களில் நடித்தார்.
தற்போது இவர் சிவகார்த்திகேயனின் ஜோடியாக ‘அமரன்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ஒரு சில நாட்களே ஆகியுள்ள நிலையில், ரூ.83 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் ரூ.100 கோடி வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.