சண்டைக் காட்சிகளில் நடிப்பது எளிது: சமந்தா

சண்டைக் காட்சிகளில் நடிப்பது எளிது: சமந்தா

3 mins read
74c1ad2d-66fe-4a4b-a8ad-56430d827a54
சமந்தா. - படம்: டிவி9
multi-img1 of 2

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிப்பாளராகவும் கதாநாயகியாகவும் களமிறங்கியுள்ளார் நடிகை சமந்தா. அவர் தயாரித்து, நடித்துள்ள புதுப்படமான ‘எங்கள் தங்கம்’ விரைவில் வெளியாகிறது.

சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் சமந்தா.

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை உருவாக்கத் திட்டமிட்டிருந்த சமந்தா, இந்தக் கதையில் நடிக்க முதலில் சாய் பல்லவியைத்தான் அணுகினாராம்.

ஆனால், அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. இதையடுத்து, அதே கதையில் கூடுதலாகச் சில சண்டைக் காட்சிகளைச் சேர்த்துத் தாமே நடிக்க முடிவு செய்தாராம்.

மேலும், நடனக் காட்சிகளைவிடச் சண்டைக் காட்சிகளில் நடிப்பது மிகவும் எளிதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

நடிகையாக இருப்பது எப்போதுமே தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த சில நாள்களில் ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பதில் இருக்கும் சிரமங்களை முழுமையாகப் புரிந்து கொண்டதாகக் கூறினார்.

தமிழ்நாடு எப்போதும் தமது தாய் வீடு போன்றது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட சமந்தா, தமிழ் ரசிகர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் படைப்புகளை உருவாக்கப்போவதாக உறுதியளித்தார்.

‘எங்கள் தங்கம்’ திரைப்படம்போல் நல்ல கதைகளும் அழுத்தமான கதாபாத்திரங்களும் அமைந்தால், தமிழில் மீண்டும் தொடர்ந்து நடிக்கத் தயாராக இருப்பதாகக் கூறியதுடன், அத்தகைய கதை, கதாபாத்திரங்களுடன் தம்மை அணுகலாம் என்று தமிழ் இயக்குநர்களுக்கு அழைப்பும் விடுத்தார் சமந்தா.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

‘எங்கள் தங்கம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் யார் தெரியுமா?’ என்ற அதிரடி வசனத்தைப் பேச மிகவும் தயக்கமாக, வெட்கமாக இருந்ததாம். அதனால் அக்காட்சியைப் பலமுறை படமாக்க வேண்டியிருந்தது என்றார்.

நிகழ்ச்சி முடிந்த கையோடு, தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் சமந்தா. பின்னர் முதல்வருடனான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

“விஜய் எப்போதுமே திரையில் மட்டும் கதாநாயகனாக இருக்க வேண்டியவர் இல்லை என்று நான் நினைப்பதுண்டு. அவருடைய ஆற்றல், அவருடைய ஆளுமை, மக்கள் அவர்மீது காட்டும் அன்பு ஆகிய அனைத்தும், அவர் இதைவிடப் பெரிய ஏதோ ஒன்றுக்காகவே உருவாக்கப்பட்டவர் என்பதை உணர்த்தி இருக்கின்றன.

“எல்லாவற்றையும்விட அவரிடம் அதிகமாக ஈர்ப்பது எதுவென்றால், ஒரு புதிய களத்தில் கால்பதிப்பதற்குத் தேவைப்படும் அந்தத் துணிச்சல்தான்.

“மேலும், ஏற்கெனவே நாம் சாதித்து, முத்திரை பதித்த ஒரு துறையை விட்டுவிட்டு, சவால்களும் பொறுப்புகளும் மிக அதிகமாக உள்ள ஒரு புதிய களத்தைக் கையில் எடுப்பது சாதாரண விஷயமன்று. நம்மால் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையினால்தான் அவர் அதைச் செய்கிறார்,” என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ‘எங்கள் தங்கம்’ படத்தில் சமந்தாவின் மாமியாராக நடித்துள்ள நடிகை கௌதமி, சமந்தா தயாரிப்பில் அருமையான படைப்பு உருவாகி உள்ளதாகத் தெரிவித்தார்.

“இந்தப் படத்தில் நடித்தது மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்றுகூட தெரியவில்லை. நான் மீண்டும் கேமரா முன் தோன்றுவதற்கு இப்படத்தின் தயாரிப்பாளரான சமந்தா, இயக்குநர் நந்தினி ரெட்டி ஆகிய இருவருமே முக்கியக் காரணம்,” என்று கௌதமி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்நடிகைஇயக்குநர்சமந்தாசண்டை