தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமந்தாவிற்கு சாபமிடும் இயக்குநரின் மனைவி

3 mins read
1d5b8c9b-4a0b-42f0-88ae-52dc44f7cb97
இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் சமந்தா. - படங்கள்: ஊடகம்
multi-img1 of 2

இயக்குநர் ராஜ் நிடிமோருடன் சமந்தா இருக்கும் படங்களைப் பார்த்து விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில், இயக்குநரின் மனைவி போட்டிருக்கும் பதிவு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

அழகான ஜோடியாக வலம் வந்த சமந்தா, நாக சைதன்யா ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது நாளடைவில் பெரிதாக, இறுதியில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதையடுத்து படத்தில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா.

‘மயோசைட்டிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதனால், மனவேதனையில் இருந்த சமந்தா, அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.

சமந்தா என்னதான் சினிமாவிலிருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்தாலும் அவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

அண்மையில் சமந்தா, ‘தி பேமிலி மேன்’, ‘சிட்டாடல்’ ஆகிய இணையத் தொடர்களை இயக்கிய ராஜ் நிடிமோருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

அதுமட்டுமின்றி, இருவரும் ஜோடியாக காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று ராகு, கேது பூஜை செய்தனர். அதனால், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் ராஜ் நிடிமோரை சமந்தா திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

“சமந்தாவைப் பற்றி வரும் காதல் வதந்திகள் எதிலும் உண்மையில்லை. அவர் நாக சைதன்யாவைப் பிரிந்த பிறகு, திருமணம் செய்துகொள்ளும் மனநிலையில் இல்லை,” என்று அவரது மேலாளர் திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில், இயக்குநர் ராஜ் நிடிமோருவின் மனைவி ஷியாமலி டே தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில், “என் கணவருடன் சமந்தா இருக்கும் படத்தைப் பார்த்துவிட்டு என்னிடம் நலம் விசாரித்த அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என்று பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பதிவில், “நீங்கள் செய்த நல்ல செயல்களுக்கேற்ப கர்மா உங்களைத் தேடி வந்து ஆசீர்வதிக்கும். அதேபோல், நீங்கள் செய்த தீய செயல்ககளால் கர்மா உங்களைப் பின்தொடரும். அது உங்களைத் தேடி வந்து தண்டிக்கும். உங்கள் ஆன்மா மலரட்டும்,’’ என்று மறைமுகமாக ஆசீர்வதிப்பதுபோல் சாபம் விட்டிருக்கிறார்.

இந்தப் பதிவினைப் பார்த்த பலரும், “ஒரு பெண்ணின் வாழ்க்கையைக் கெடுப்பது பாவம், அந்த தவற்றைச் செய்யாதீர்கள் சமந்தா. நாக சைதன்யா செய்ததுபோல், வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு நல்ல வாழ்க்கையைத் தொடங்குங்கள்,” என்று சமந்தாவிற்கு அறிவுரை கூறி பதிவிட்டு வருகிறார்கள்.

இயக்குநரான ராஜ் நிடிமோரு ‘தி பேமிலி மேன் 2’ என்ற இணையத்தொடரை டிகே என்பவருடன் சேர்ந்து இயக்கி இருந்தார். மேலும், இவர் ‘சிட்டாடெல்’ என்கிற இணையத்தொடரை இயக்கி இருந்தார். ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரில் சமந்தா நடித்தபோதே இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டதாகவும் அந்த நட்பு ‘சிட்டாடெல்’ படப்பிடிப்பின்போது காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

சினிமாவில் நடிகர், நடிகைகள் கைகோத்தபடி நடந்து செல்வது, கட்டியணைப்பது என்பதெல்லாம் பொதுவான விஷயம்தான். இதையெல்லாம் வைத்து இவர்கள் இருவரும் கைகோத்தபடி இருக்கும் படங்களைப் பார்த்து அவர்கள் காதலிப்பதாகக் கூறுவது எல்லாம் வதந்தியாகவே பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக நடிகை சமந்தாவும் நடிகரும் இயக்குநருமான ராகுல் ரவீந்திரனும் ஒன்றாகக் கைகோத்தபடி ஒரு நிகழ்ச்சிக்கு வந்துசென்ற காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாசமந்தாகாதல்