அண்மையில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள நடிகைகளின் பட்டியல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
காரணம், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர் சமந்தா. இரண்டு ஆண்டுகளாக அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. அப்படி இருந்தும் ரசிகர்கள் இடையே அவருக்கான மவுசு குறையவில்லை.
ஓர்மேக்ஸ் மீடியா ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளின் பட்டியலை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், பிப்ரவரி மாதத்திற்கான நடிகைகள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்தப் பட்டியலில்தான் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார்.
சமந்தா முதலிடத்தைப் பிடித்திருப்பது ரஷ்மிகா, திரிஷா, சாய் பல்லவி, நயன்தாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் நடிகை ஆலியா பட் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். வெற்றிப் படங்களில் நடிக்காவிட்டாலும் சமூக ஊடகங்களில் அவர் தொடர்ந்து இயங்கி வருவதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
‘கல்கி 2898 ஏடி’ நடிகை தீபிகா படுகோன் மூன்றாம் இடத்தில் உள்ளார். சாய் பல்லவிக்கு நான்காம் இடம் கிடைத்துள்ளது. இவர் தற்போது பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இதனால் பலமொழி ஊடகங்களில் இவரைப் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
சமந்தாவுக்கு அடுத்தபடியாக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார் காஜல் அகர்வால். அவருக்கு இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.
இத்தனைக்கும் திருமணத்துக்குப் பிறகு இவர் பெரிதாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக திரையுலகைவிட்டு ஒதுங்கியே நிற்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
‘புஷ்பா 2’, ‘சாவா’ படங்களின் நாயகியான ராஷ்மிகா மந்தனா, தற்போது சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி வெளியாகிறது. அவருக்குப் பட்டியலில் கிடைத்திருப்பது ஆறாவது இடம்தான். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்த திரிஷா இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாக உள்ளது. அதேபோல் நடிகை நயன்தாரா எட்டாவது இடம் பிடித்துள்ளார். நயன்தாரா பற்றி அதிகளவில் செய்திகள் வந்தாலும் அவருக்கு எட்டாவது இடம்தான் வாய்த்துள்ளது.
தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா ஐந்து இடங்களுக்குள் வந்துவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்ற ‘கிஸ்க்கு’ பாடலில் கலக்கிய அவருக்கு ஒன்பதாவது இடம்தான் கிடைத்துள்ளது. நடிகை அனுஷ்கா ஷெட்டி பத்தாவது இடத்தில் உள்ளார்.