நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் நடித்துள்ள ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ இணையத் தொடரில் நடிக்க அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார்.
இதில், நாயகனுக்கு இணையாக சமந்தாவும் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.
ஒரு காலத்தில் திரையரங்கில் ஒரு படம் பார்ப்பதைத் தவறவிட்டால் அந்தப் படத்தை தொலைக்காட்சியில் போடும்வரை நாம் காத்திருக்க வேண்டும். அதோடு ஒரே மாதிரியான கதைகளில்தான் படங்களும் இருக்கும். எப்பொழுதாவது காதல், திகில் படங்கள் வெளியாவதுண்டு.
அதிலும் ஒருசில தொலைக்காட்சியில், குடும்பத்தோடு பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக, படத்தின் காதல் காட்சிகளை வெட்டிவிட்டு படத்தை ஒளிபரப்புவர்.
தற்போது இந்தப் பிரச்சினை எல்லாம் இல்லை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பல்வேறு ஓடிடி தளங்களில் நமக்குப் பிடித்த படம், தொடர்களைப் பார்த்து ரசிக்க முடிகிறது.
ஓடிடிகளின் அசுர வளர்ச்சியால் திரையரங்குகளே வரும் நாள்களில் காணாமல் போகலாம் எனத் தெரிகிறது. அந்தவகையில் ஓடிடி தளத்தில் இந்தியாவின் அதிகபட்ச சம்பளம் வாங்கும் நடிகையாக சமந்தா திகழ்கிறார்.
சமந்தா நடித்த ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ தொடரில் நடிக்க ரூபாய் 10 கோடி அவர் சம்பளமாக வாங்கியுள்ளார்.
கடந்த இரு ஆண்டுகளாக படங்கள் ஓடாதது, சொந்த வாழ்க்கை பிரச்சினை, உடல்நலப் பிரச்சினை ஆகியவற்றால் நொந்து போயிருந்த சமந்தா, இந்தத் தொடரின் மூலம் மீண்டும் ஒரு நல்ல வரவேற்பைக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
ஓடிடியில் நடித்தாலும் மறுபக்கம் தொடர்ந்து சினிமாவிலும் சமந்தா தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சமந்தா, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாத்திரங்களாகத் தேர்வு செய்து நடிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் பேசியபோது, “நான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிகவும் பொறுப்புடன் தேர்வு செய்கிறேன். இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று உணர்கிறேன்.
“திரைப்படங்களில் பெண் கதாபாத்திரங்களை ஆண்கள்தான் முடிவு செய்கிறார்கள். அதனால் அது நிச்சயம் பெண்களின் பயணமாக இருக்காது.
“இனி, பெண்களை நியாயமான முறையில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். ‘சிட்டாடல்’ இணையத் தொடரில் நாயகனுக்கு இணையான வேடம் எனக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
“ஒரு நாயகன் செய்வதை நாயகியும் செய்யலாம் என்பதை இந்த இணையத் தொடர் நிரூபித்துள்ளது. அதனால், பெண்களைப் பொம்மையாகக் காட்டும் கதாபாத்திரங்களில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்திருக்கிறேன்.
“நடிகை பிரியங்கா சோப்ரா, பெண்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். பெரிதாக யோசிக்க அவர்தான் கற்றுக்கொடுக்கிறார்.
“இவர்களைப் போன்றவர்கள் அதிகார மையங்களில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று சமந்தா கூறினார்.