“சினிமா ஒரு பெருங்கடல். இங்குப் பக்குவமும் தனிமனித ஒழுக்கமும் மிக முக்கியம். காயங்களும் அவமானங்களும் நம்மைக் கடந்துபோகத்தான் செய்யும். ஆனால், உண்மையான உழைப்பும் நேர்மையும் இருந்தால் பிரபஞ்சம் நமக்கான அங்கீகாரத்தைக் கண்டிப்பாகத் தரும்” என நம்பிக்கையோடு கூறுகிறார் நடன இயக்குநர் சாண்டி.
நடனத்தில் முத்திரைப் பதித்த சாண்டி, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் பெரும்பாலான வீடுகளின் செல்லப் பிள்ளையானார். அதன் பின்னர் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து, அனைவரையும் அச்சுறுத்தும் அளவிற்குத் தன் நடிப்பிலும் அசுரத்திறமையை வெளிப்படுத்தினார்.
“நான் ‘லோகா சாப்டர்-1’, தெலுங்கில் ‘கிஷ்கிந்தாபுரி’ எனத் தற்போது பல மொழிகளில் நல்ல வாய்ப்புகள் அமைந்ததால் நடிகராக வலம் வருகிறேன்.
“சினிமா என்பது கனவுகளின் பூமி. ஆனால், அங்குக் காலூன்றி நிற்பது அத்தனை எளிதல்ல,” என்கிறார் சாண்டி.
எவ்விதப் பின்னணியும் இன்றி, தெருமுனை நடனங்களில் தொடங்கி இன்று இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களைத் தன் விரலசைவில் ஆடவைக்கும் நடன இயக்குநராகவும் முன்னணி நடிகராகவும் உருவெடுத்துள்ளார்,” சாண்டி மாஸ்டர்.
“சென்னையில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த எனக்கு, சிறு வயது முதலே நடனத்தின் மீது தீராத ஆர்வம். குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பைத் தொடர முடியாமல் போனாலும், நடனக் கலைக்கான எனது தேடல் நிற்கவில்லை.
“பெற்றோர் கடன் வாங்கி நடனச் சங்கத்தில் அடையாள அட்டை எடுத்துக் கொடுக்க, என் உழைப்பையே மூலதனமாகக் கொண்டு களமிறங்கினேன்.
“சின்னத்திரையில் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சிதான் எனக்கு முதல் முகவரியாக அமைந்தது. திரையுலகில் வாய்ப்புகள் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. பல தடைகளையும் அவமானங்களையும் கடந்த பிறகே, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தின்மூலம் திரையுலகில் முறைப்படி நடன இயக்குநராகக் களம்கண்டேன்.
அதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘பத்தல பத்தல’ என்ற பாடல் வரை அவர் அமைத்த நடன அசைவுகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன.
“என் பெற்றோர் இப்போதும் என்னை நல்லவிதமாகக் கவனித்துக்கொள்கிறார்கள். எனது திறமைதான் எனது மகிழ்ச்சி என்பேன்.
“அடுத்தடுத்த பட வாய்ப்புகள் என்னை எப்போதுமே தயார்நிலையில் வைத்திருக்கின்றன. இதைத்தான் எனது கௌரவமாகக் கருதுகிறேன்.
“காலையில் படப்பிடிப்புக்குச் சென்றால், அனைத்து வேலைகளும் முடியும் வரை ஆர்வம் குறையாமல் பணியாற்றுவேன். பணி முடிந்து வீடு திரும்பிய பிறகும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நீடிக்கின்றன.
“என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஓர் உண்மையை ரசிகர்களுடன் பகிர விரும்புகிறேன். வேறொன்றுமில்லை. எனக்கு சினிமாவைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது,” என்று அண்மைய ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார் சாண்டி.


