தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிப்புத் துறைக்குப் பாதை வகுத்த படிப்பு: சஞ்சனா

3 mins read
e62ba6b0-ecb6-4dc3-b6f4-a18de22fb562
சஞ்சனா. - படம்: ஊடகம்

தாம் மேற்கொண்ட பட்டப்படிப்புதான் தம்மை நடிகையாக மாற்றியது என்கிறார் சஞ்சனா நடராஜன்.

‘சார்பட்டா பரம்பரை’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இவர். தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில், தினகரன் இயக்கியுள்ள ‘பாட்டில் ராதா’ படத்தில் நடித்துள்ளார்.

“நான் ‘விஷுவல் கம்யூனிகேஷன்’ (விஸ்காம்) எனப்படும், திரைத்துறையுடன் தொடர்புடைய பட்டப்படிப்பைத்தான் மேற்கொண்டேன். அப்போது நானே சில குறும்படங்களை உருவாக்கியதுண்டு.

“கேமரா லென்ஸ் எப்படி இருக்கும், லென்ஸ் வகைகள் என்னென்ன, கதை எழுதுவது எப்படி எனத் தொழில் ரீதியில் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள பட்டப்படிப்பு உதவியது.

“வாய்ப்பு கிடைத்தால் திரைத்துறையில் முன்னேறுவோம். இல்லையெனில் மனத்தில் உள்ள ஆசையை அடியோடு அழித்துவிடுவோம் என்ற எண்ணத்துடன்தான் சினிமாவுக்கு வந்தேன்.

“பலருக்கு படிப்பு வேறு, வேலை வேறு என்று அமையும். என் வாழ்க்கையில் படித்த படிப்புக்கு ஏற்ற மாதிரியான வேலை கிடைத்தது,” என்று சொல்லும் சஞ்சனா நடராஜனுக்கு, ‘பாட்டில் ராதா’ படத்தில் மிக அழுத்தமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.

மதுவுக்கு அடிமையான ஒருவரது வாழ்க்கைப் பயணம் எப்படி இருக்கும் என்பதுதான் இப்படத்தின் கதைக்கரு. அதேசமயம், இது மதுவால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே பேசும் சோகமான படமாக இருக்காதாம்.

இந்தக் கதையைக் கேட்டதுமே தன் மனத்தில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியதாகச் சொல்லும் சஞ்சனா, தனிப்பட்ட வாழ்க்கையில் தனக்கும்கூட மதுவால் பேரிழப்பு ஏற்பட்டதாக கூறுகிறார்.

“சிறு வயது முதல் என்னை வளர்த்து ஆளாக்கியவர் அண்மையில் இறந்துவிட்டார். அவரது இழப்புக்கான காரணங்களில் மதுவும் ஒன்று. இது என் மனத்தில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது.

“அப்படிப்பட்ட சூழலில்தான் இந்தக் கதையை ஏற்கும் வாய்ப்பு அமைந்தது. இது மக்களிடம் கண்டிப்பாக போய்ச்சேர வேண்டிய கதை மட்டுமல்ல, அந்தப் பணியைச் செய்ய வேண்டியது என் பொறுப்பு என்றும் என் மனத்தில் தோன்றியது.

“நான் திரைத்துறையில் அறிமுகமான புதிதில் அல்லது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு என்ன, இந்த வாய்ப்பு எப்போது கிடைத்திருந்தாலும் நிச்சயமாக நடித்திருப்பேன்,” என்கிறார் சஞ்சனா.

இதில் இவரது கணவராக நடிகர் குரு சோமசுந்தரம் நடித்துள்ளார்.

‘அஞ்சனம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஞ்சனா. மதுவுக்கு அடிமையான ஒருவரின் மனைவி மட்டுமல்ல, அவரது தாயார், மகள், நண்பர்கள் எனச் சுற்றியுள்ள அனைவருக்குமே எத்தகைய வலி இருக்கும் என்பதை இப்படம் காட்சிப்படுத்தி உள்ளது.

“ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. சஞ்சனா என்றால் அழுதுவடியும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பார் என்று சிலர் கூறுகின்றனர். இதுவரை நான் நடித்த எல்லா படங்களுமே தனித்துவமானவை.

“ஒரே மாதிரியான வேடங்கள் அமைவதை திரைத்துறையில் தவிர்க்க முடியாது. இது எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் நடக்கக் கூடியதுதான்.

“தனிப்பட்ட வகையில் எனக்கும்கூட சோதனை முறையில் சில கதாபாத்திரங்களில் நடிக்கும் ஆசை உண்டு. ஆனால், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்தான் எதையும் முடிவு செய்ய இயலும்,” என்கிறார் சஞ்சனா.

‘பாட்டில் ராதா’, ஜிகர்தண்டா’, ‘போர்’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபத்திரங்களில் நடித்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

திரைத்துறையில் தாம் தொடர்ந்து சாதிக்க தனது குடும்பத்தாரின் ஆதரவும் முக்கியம் என்று கூறுகிறார்.

“நான் சோர்வடையும் போதெல்லாம் ஊக்கப்படுத்துவது என் குடும்பத்தார்தான். என்னுடைய முயற்சிகளும் காத்திருப்பும் வீண் வேலை என்று எந்த ஒரு கட்டத்திலும் அவர்கள் கூறியதில்லை.

“அதேபோல் எனக்கு வாய்ப்பு அளிக்கும் இயக்குநர்களையும் குறிப்பிட்டாக வேண்டும். பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருடன் இரண்டு படங்களில் பணியாற்றி இருப்பதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன்.

“இன்றைய தேதியில் ஒரு வாய்ப்பு கிடைப்பதே பெரிது. மீண்டும் வாய்ப்பு தருகிறார்கள் என்றால் அவர்களுடைய நம்பிக்கையை வீணடிக்காமல் என்னால் முடிந்த அளவு நடித்திருக்கிறேன் என்றுதானே அர்த்தம்.

“அதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்கிறார் சஞ்சனா நடராஜன்.

குறிப்புச் சொற்கள்