சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சரண்யா ரவிச்சந்திரன் (படம்), ‘ஜெயில்’, ‘வெள்ளை யானை’ உள்ளிட்ட சில படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில், அவர் ‘க.மு -க.பி’ என்ற படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளாராம்.
‘க.மு – க.பி’ என்றால் கல்யாணத்துக்கு முன், கல்யாணத்துக்குப் பின் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் படத்தின் இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம்.
‘டாணாகாரன்’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள விக்னேஷ் ரவி இதில் நாயகனாகவும் ‘லப்பர் பந்து’ படத்தில் நடித்துள்ள டி.எஸ்.கே. முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
“காதலிக்கும்போது குறை, நிறைகள் தெரியாது. சாதகமான அம்சங்கள் மட்டுமே கண்களுக்குத் தெரியும். ஈர்ப்பு உணர்வும் அதிகமாக இருக்கும். திருமணத்துக்குப் பிறகுதான் சேர்ந்து இருக்கும் நேரம் அதிகம் என்பதால் உண்மையான குணங்கள், முகமும் தெரிய ஆரம்பிக்கும்.
“பொருளியல், சமூக காரணங்கள் ஆகிய பல அம்சங்கள் ஒன்றுசேர்ந்து காதல் ஜோடிகளுக்கு இடையேயான ஈர்ப்பைக் குறைத்துவிடும். அது குறித்து இந்தப்படத்தில் விவரித்துள்ளோம்,” என்கிறார் இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம்.
இன்றைய இளையர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய நல்ல புரிதலை ஏற்படுத்தும் கொண்டாட்டமான படமாக ‘க.மு – க.பி’ அமையும் என்றும் அவர் உத்திரவாதம் அளித்துள்ளார்.
“யதார்த்தமான, நகைச்சுவையான படங்களுக்கும் நல்ல நடிப்புக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவேதான், நாங்களும் நம்பிக்கையுடன் களமிறங்குகிறோம்,” என்றும் சொல்கிறார் இயக்குநர் புஷ்பநாதன் ஆறுமுகம்.