உளவுத்துறையை விவரிக்கும் ‘சர்தார்-2’

உளவுத்துறையை விவரிக்கும் ‘சர்தார்-2’

2 mins read
a6fd8f2a-f007-48f8-b94d-a3d174dfe53f
(இடமிருந்து) கார்த்தி, மித்ரன், எஸ்.ஜே.சூர்யா. - படம்: விகடன்
Google News Preferred Icon

தமிழ்ச் சினிமாவில் உளவுத்துறை, அனைத்துலகக் கதைக்களத்துடன் கூடிய படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு.

அந்த வரிசையில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ‘சர்தார்-2’ திரைப்படம் திரை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியையும் 100 கோடி ரூபாய் வசூலையும் தொடர்ந்து, அதன் அடுத்தகட்டப் பரிணாமமாக இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

‘சர்தார்-2’ குறித்துப் பேசினாலே உற்சாகமாகிவிடுகிறார் பி.எஸ்.மித்ரன். இது வெறும் நாடு விட்டு நாடு செல்லும் சாதாரண உளவுக்கதை அல்ல என்றும் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்துகிறார்.

“நம் கண்ணுக்குத் தெரியாமல், நிழல்போல் நம்மைப் பின்தொடரும் உளவாளிகளின் நிஜ உலகையும் அவர்களின் உளவியல் சார்ந்த போராட்டங்களையும் மையமாகக் கொண்டே இத்திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ‘மிஷனி’ல் உளவாளி ஜெயிக்கிறாரா தோற்கிறாரா என்பதைத் தாண்டி, அவரது மனரீதியான உணர்ச்சிகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை இந்த உளவுப்படம் விவரிக்கும்,” என்கிறார் மித்ரன்.

இப்படத்தின் கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே நடிகர் கார்த்தி உடனடியாக சம்மதம் தெரிவித்தாராம். முதல் பாகத்தைவிட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிதீவிரமாகப் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், வயதான தந்தை, இளையர் என இரண்டு பரிமாணங்களில் கார்த்தி தனது கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்துள்ளார்.

“இப்படத்தின் மற்றொரு முக்கியச் சிறப்பம்சம், கார்த்தி-எஸ்.ஜே.சூர்யா கூட்டணி முதன்முறையாக இணைந்திருப்பதுதான். வில்லன் கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துகொண்டு எஸ்.ஜே.சூர்யா இதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் ரஜிஷா விஜயன், மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் கதையின் முக்கியத் திருப்பங்களில் தோன்றுகின்றனர்.

“இசையமைப்பாளர் சாம் சி.எஸ் சாம்சுக்கு இது 100வது படமாக அமைந்திருப்பது பெரும் சிறப்பு. ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்சின் சிறப்பான கேமரா உழைப்பும் எடிட்டர் விஜய் வேலுகுட்டியின் நேர்த்தியான வெட்டுக்களும் படத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கின்றன.

“கதை நாயகனான உளவாளி தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றினாரா என்பதைத் தாண்டி, உளவியல் ரீதியான, மனரீதியான உணர்வுகளை அடிப்படையாக வைத்து அந்த ‘மிஷன்’ எப்படி முடிவானது என்பதுதான் ‘சர்தார்-2’.

“நமக்கு அதிகம் தெரிந்ததெல்லாம் உளவு என்பது நாடுவிட்டு நாடு நடப்பதுதான். ஆனால், மிகவும் எளிமையான இடத்திலிருந்து தொடங்கி அனைத்துலக அளவில் உளவுபோகிறது.

“நிழல்கூட பின்தொடராதபடி நமக்குத் தெரியாமலேயே நடமாடும் நிழல் மனிதர்களின் கதையும்கூட இதில் அடங்கும்,” என்றார் மித்ரன்.

குறிப்புச் சொற்கள்