நடிகர் சதீஷ் மீண்டும் நாயகனாக நடிக்கும் புதுப்படம் ‘சட்டம் என் கையில்’.
இப்படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித்தொகுப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
சுமார் ஒரு நிமிடம் வரக்கூடிய இந்த காணொளிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தயாரிப்புத்தரப்பு தெரிவித்துள்ளது.
ஒருவித மர்மத்துடன் தொடங்கும் இக்கதையில், அடுத்தடுத்து சில கொலைச் சம்பவங்கள் அரங்கேற, அவற்றுக்கு யார் காரணம் எனத் தெரியாமல் காவல்துறை திணறுவதாக கதை நகருமாம்.
படம் முழுவதும் ஒருவித பயத்தையும் வில்லத்தனத்தையும் தனது முகத்தில் பிரதிபலிப்பாராம் சதீஷ்.
நகைச்சுவை நடிகராக திரையுலகில் அறிமுகமான சதீஷ், ஏற்கெனவே ‘நாய் சேகர்’, ஓ மை கோஸ்ட்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
இப்புதுப் படத்தில் நடிகை சம்பதா நாயகியாக நடிக்க, வித்யா பிரதீப், ரித்விகா, ராம்தாஸ், மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
சாச்சி இயக்கியுள்ள படம் இது. இவர் ஏற்கெனவே ‘சிக்ஸர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ’சட்டம் என் கையில்’ படம், வரும் 20ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியீடு காண உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய சாச்சி, ஒரு காவல் நிலையத்தில் ஓர் இரவு முழுவதும் நடக்கும் சம்பவங்களை விவரிக்கும் கதையாக இப்படம் உருவாகி உள்ளது என்றார்.
“ஒரு சாமான்ய மனிதன் காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார். அவர் எவ்வாறு காவல்துறையின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறார் என்பதும் அதிகாரம் உள்ள மனிதர்களுக்கு முன்னால் தாம் அதிகாரமற்ற மனிதனாக நிற்பதை உணரும்போது என்ன நடக்கிறது என்பதும் இப்படத்தில் விரிவாக சொல்லப்பட்டது.
“நாயகன் தனது நகைச்சுவை உணர்வை வைத்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதை சுவாரசியமாக விவரித்துள்ளோம்,” என்கிறார் இயக்குநர் சாச்சி.

