என் உயிரைக் காப்பாற்றுங்கள்: நடிகர் அபிநய் உருக்கமான வேண்டுகோள்

1 mins read
843d2583-30a8-41d8-8fe0-2917f04f9324
நடிகர் அபிநய். - படம்: ஊடகம்

நடிகர் அபிநய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தகவல் தமிழ்த் திரையுலகத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டு, தனுஷ் அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அபிநய், நடிகை ஷெரின் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் அறிமுகமாகினர்.

அதன் பின்னர், அபிநய் ‘ஜங்ஷன்’, ‘சிங்கார சென்னை’, ‘பொன் மேகலை’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார்.

அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். சில விளம்பரப் படங்களிலும் அவரைக் காண முடியும்.

இந்நிலையில் 43 வயதான இவர், கல்லீரல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

தாம் உயிருக்குப் போராடி வருவதாகவும் சிகிச்சைக்கு 28 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அபிநய்.

அதில், தனக்கு நிதியுதவி செய்யுமாறு திரையுலகத்தினருக்கும் ரசிகர்களுக்கும் அவர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அபிநய் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவரது குடும்பமும் வறுமையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்