தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளி, கல்லூரி நாள்கள் மீண்டும் திரும்ப வேண்டும்: அனிருத்

2 mins read
51b6c400-31bf-4f6b-8e72-e5c1625cb882
அனிருத். - படம்: ஊடகம்

பள்ளி, கல்லூரியில் படித்தபோது அமைந்த மகிழ்ச்சியான நாள்கள் மீண்டும் அமைய வேண்டும் என விரும்புவதாக அண்மைய மலையாள ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

மலையாளத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், ஃபகத் ஃபாசில் ஆகிய இருவரும் தமக்குப் பிடித்தமான நடிகர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பேட்டியில், ‘ஒரு நாள் யார் கண்ணுக்கும் தெரியாத வரம் பெற்றால் என்ன செய்வீர்கள்’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘யார் கண்ணுக்கும் தெரியாமல் இருந்தால் முதலில் பேருந்தில் பயணம் மேற்கொள்வேன்’ எனப் பதிலளித்துள்ளார் அனிருத்.

“சிறு வயதில் எவ்வாறு பயணம் செய்தேனோ, அப்படியே இப்போதும் நடக்க வேண்டும் என விரும்புகிறேன்.

“அந்த நாள்களை இன்னும் மறக்கவில்லை. அவற்றை இழந்தாற்போல் உணர்கிறேன். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது என்னால் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆனால், இந்தியாவில் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை,” என்று கூறியுள்ள அனிருத், தனது தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் இப்பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

தினமும் பிற்பகலில் தூங்கி எழுவாராம். அவ்வாறு எழுந்த கையோடு தன் பெற்றோருடன் 20 நிமிடங்களாவது செலவிடுகிறார். அதன் பிறகே தனது ஒலிப்பதிவுக் கூடத்துக்குச் செல்வாராம்.

“என்னுடைய குழுவில் மொத்தம் எட்டுப் பேர் உள்ளனர். பள்ளி, கல்லூரி நாள்களில் இருந்தே நாங்கள் ஒரே குழுவாக இருந்து வருகிறோம். எனவே, இசையமைப்பை ஒரு வேலையாகவே நாங்கள் கருதியதில்லை. நண்பர்கள் சொல்லும் பரிந்துரைகளையும் கவனத்தில் கொள்வேன்.

“குழுவில் உள்ள எட்டுப் பேருக்குமே ஒரு பாடல் பிடித்திருந்தால் மட்டும்தான் அதை இயக்குநருக்கு அனுப்புவோம். இல்லையெனில் வேறு விதமாக மெட்டமைக்கத் தொடங்குவோம். நண்பர்களாக இருப்பதால்தான் இந்தப் பணியை மகிழ்ச்சியாகச் செய்ய முடிகிறது,” என்றும் அனிருத் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்