ஜெயலலிதா:
சென்னை போயஸ் தோட்டம் பகுதியில், தனது சினிமா ஊதியத்தைச் சேமித்து வைத்து, வீட்டுமனை (காலிமனை) வாங்கி, அதில் வீடு கட்டினார் ஜெயலலிதா.
புதுமனை புகுவிழா நடத்த நல்ல தேதி குறித்தாகிவிட்டது. யார் யாருக்குத் துணிமணி, ஆபரணம் வாங்கிக் கொடுப்பது என ஒரு நீண்ட பட்டியலை எழுதி, மகள் ஜெயலலிதாவிடம் காட்டினார் அவரது தாய் சந்தியா.
இப்படி அனைத்து ஏற்பாடுகளையும் குதூகலமாகச் செய்து முடித்த பின்னர் அந்த விழா, குறிப்பிட்ட நாளில் நடைபெற இருந்தது. ஆனால், அதற்கு சில நாள்களுக்கு முன்பாக மாரடைப்பால் காலமானார் சந்தியா. தாயாரின் மரணம் ஜெயலலிதாவை அவரது கடைசிக்காலம் வரை உள்ளூர வாட்டியது.
எனினும், தனது இறுதிநாள் வரை போயஸ் தோட்டத்தில் உள்ள அந்த வேதா இல்லத்தில்தான் வசித்தார் ஜெயலலிதா.
கலைஞர் கருணாநிதி:
சென்னை கோபாலபுரத்தில் வீடு வாங்கினார் கலைஞர் கருணாநிதி. அவரது குடும்பமும் அவரது சகோதரியின் குடும்பமும் இணைந்தே அங்கு வசித்தனர்.
கடன் பிரச்சினையால் கோபாலபுரம் வீட்டை ஏலம்விடப் போவதாக பிரபல வங்கி ஒன்று அறிவிப்பு வெளியிட்டது. விவரம் எம்ஜிஆருக்குப் போனது.
தொடர்புடைய செய்திகள்
கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ‘எங்கள் தங்கம்’ என்ற படத்தை ஊதியம் வாங்காமலேயே நடித்துக் கொடுத்தார் எம்ஜிஆர். கதாநாயகியாக நடித்த ஜெயலலிதாவும் சம்பளம் வாங்கவில்லை. அப்படம் பெரும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. அதன் மூலம் கடனை அடைத்து வீட்டை மீட்டனர்.
‘எங்கள் தங்கம்’ நூறாவது நாள் வெற்றி விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன், “எங்களின் வீட்டை மீட்டவர், மானம் காத்தவர் எம்ஜிஆர்,” என நெகிழ்ந்து கூறினார்.
எம்ஜிஆர்:
நகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனையும் அவரது தந்தை குணசித்திர நடிகர் மோகன் ராமனையும் பலருக்குத் தெரிந்திருக்கும்.
மோகன் ராமனின் தந்தை பிரபல வழக்கறிஞர் வி.பி.ராமன். அவர் எம்ஜிஆரின் ஆட்சிக்காலத்தில் அரசு வழக்கறிஞராகவும் திமுக பிரமுகராகவும் இருந்தவர்.
சென்னை ராயப்பேட்டையில் இருந்த வி.பி.ராமன் வீட்டில்தான் வாடகைக்குக் குடிபோனது எம்ஜிஆர் குடும்பம்.
“எனக்கு ஒரு மகன் இருக்கிறான். இரண்டு வீடுகள் உள்ளன. நீயும் என் பிள்ளை மாதிரித்தான். நீ ஒரு வீட்டை விலைக்கு வாங்கிக்கொள்,” என்றார் ஏ.வி.ராமன்.
அப்போது எம்ஜிஆர் மிகவும் பிரபலமான, அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இல்லை. அதனால் தயங்கினார்.
“விலைவாசி தினம் தினம் ஏறும், அதைவிடு. இன்று நான் இந்த வீட்டுக்கு ஒரு விலை சொல்கிறேன். நீ எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் இதே விலையைக் கொடு,” என்றார்.
‘நாடோடி மன்னன்’ படம் வெளியானது. மக்களின் மன்னன் ஆனார் எம்ஜிஆர். பண மழை கொட்டியது. வீட்டுக்கான பணத்தைக் கொடுத்து முதன்முதலாக ஒரு சொந்த வீட்டுக்கு உரிமையாளர் ஆனார் எம்ஜிஆர்.
அதுதான் எம்ஜிஆரின் ‘தாய்வீடு’.
சிவாஜி கணேசன்:
சென்னை தி.நகர் போக் ரோட்டில் கம்பீரமாக, வெள்ளை மாளிகையாக வசீகரிக்கிறது சிவாஜி கணேசனின் வீடான ‘அன்னை இல்லம்’.
பிரிட்டிஷ்காரரிடம் இருந்து இந்த வீட்டை வாங்கிய ஒருவர், பெரிய பங்களாவைப் பராமரிக்க முடியாமல் விற்க முன்வந்தார்.
அந்த வீட்டிற்கு எதிர் தெருவில் மனோரமா சொந்த வீட்டில் வசித்து வந்தார். தகவலறிந்த அவர், ‘சிவாஜி அண்ணன் வீடு வாங்கணும் என்றாரே’ என்பது நினைவுக்கு வந்து, ‘அண்ணே, பிரமாதமான பங்களா விலைக்கு வருதுண்ணே’ என விபரம் சொல்ல, சிவாஜி அந்த வீட்டை வாங்கி ‘அன்னை இல்லம்’ எனப் பெயர் சூட்டி, தன் பெரும் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
சரோஜாதேவி:
சென்னை அடையாறில் வீடு ஒன்றை விலை பேசிய நடிகை சரோஜாதேவிக்கு இருபதாயிரம் ரூபாய் பற்றாக்குறை.
அந்தச் சமயம் கால்ஷீட் குளறுபடியால் எம்ஜிஆருடன் சில படங்களில் சரோஜாதேவியால் நடிக்க முடியவில்லை. தன்னை அறிமுகப்படுத்திய எம்ஜிஆர் என்ன நினைப்பாரோ? என எண்ணி, எம்ஜிஆரிடம் உதவி கேட்கவில்லை.
மற்றொரு நடிகையான சௌகார் ஜானகியிடம் கடன் கேட்டார். சௌகாரிடம் அப்போது பணம் இல்லாவிட்டாலும் தருவதாகச் சொல்லிவிட்டு, எம்ஜிஆரிடம் தகவலைச் சொன்னார்.
“நீங்கள் கொடுத்த மாதிரியே இருக்கட்டும். நான் கொடுத்ததாகச் சொல்ல வேண்டாம்,” என்று குறிப்பிட்டு அந்தத் தொகையை நடிகை சௌகாரிடம் கொடுத்தார் எம்ஜிஆர். அதை சரோஜாதேவியிடம் கொடுத்தார் சௌகார்.
சில மாதங்களுக்குப் பிறகு அந்தத் தொகையை, சௌகாரிடம் திருப்பித் தந்தார் சரோஜாதேவி. அதை எம்ஜிஆரிடம் கொடுத்துவிட்டார் சௌகார். இப்படித்தான் சொந்த வீடு வாங்கினார் சரோஜா தேவி.
கமல்ஹாசன்:
கமல் தனது ‘விஸ்வரூபம்’ படத்தைப் பெரும் பொருள்செலவில் (கடனாகப் பெற்ற பணத்தில்) தயாரித்திருந்தார்.
திட்டமிட்ட தேதியில் படம் வெளியீடு காணாததால் வட்டிக்கு மேல் வட்டி எகிறி, அந்த வட்டி குட்டி போடும் நிலை. ஆனால் சில அமைப்புகள் குறிப்பிட்ட சில காட்சிகளை வெட்டாமல் படத்தை வெளியிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் கமலின் ஆழ்வார்பேட்டை பூர்வீக வீட்டின் மீது கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர, அந்த வீட்டை இழக்க வேண்டிய நிலையில், சென்னையை அடுத்த உத்தண்டியில் ஒரு வாடகை வீட்டிற்குக் குடிபோனார். இருப்பினும் ஆழ்வார்ப்பேட்டை வீட்டை தக்கவைக்கப் போராடினார்.
கொஞ்ச கொஞ்சமாக கடனை அடைத்து வந்த நிலையில், ‘விக்ரம்’ படம் கமலுக்குப் பெரும் லாபத்தை தந்தது. இதனால் கடனை அடைத்து, வீட்டை முழுமையாக மீட்டார் கமல்.
கவிஞர் வைரமுத்து:
சென்னை பாலவாக்கம் பகுதியில், கடலோரமாக கவிஞர் வைரமுத்து வெண் பளிங்கு வீடு கட்டியுள்ளார். அவரும் அவரது மனைவி பொன்மணியும் வாங்கிய இந்த வீட்டில் இளைய மகன், மனைவியுடன் வசிக்கிறார்.
பாரதிராஜா:
‘கிழக்கு சீமை’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, இதன் இசை உரிமையை (ஒலி வடிவின் உரிமை) பாரதிராஜா வைத்திருந்தார். ‘ஆடியோ ரைட்ஸ்’ மூலமாக பணம் கொட்டியது. அவரும் கடலோரம் வீடு கட்டியுள்ளார்.
விஜய்:
விஜய்யின் பாலவாக்கம் வீடு வெளியிலிருந்து பார்த்தால், தெரியாதபடி உயரமான கதவுகளால் அமைக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் வீட்டுக்குச் சென்றவர்களுக்குத் தெரியும். வாசல் கதவுக்கும் வீட்டுக் கதவுக்கும் இடையேயான தூரம் சுமார் அரை கிலோ மீட்டராவது இருக்கும்.
அங்கு ஊட்டி மலையில் உள்ள புல்மேடுபோல் செயற்கைப் புல் மேடு அமைக்கப்பட்டிருக்கும்.
சந்திரபாபு:
தனது கார், தன் வீட்டு மாடி அறை வரை செல்வதுபோல் வீடு கட்டினார் நடிகர் சந்திரபாபு. ஆனால், படம் தயாரிக்க தான் வாங்கிய கடனாலும், இந்த வீட்டைக் கட்டியதாலும் ஏற்பட்ட நெருக்கடி, மன உளைச்சல் காரணமாக வீடு அப்படியே கைவிடப்பட்டது.
வீடு வாங்கினால் மகிழ்ச்சி. வாங்க இயலாதபோது... ‘(சொந்த வீடு) இருப்பவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்கு (வாடகைக்கு) பல வீடு..’ என மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்.