தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சிவா நடித்த இரண்டாம் பாகங்கள் நிச்சயம் வெற்றி பெறும்’

3 mins read
dfa0ac8f-160f-4dd0-9c90-b26f888001c6
‘மிர்ச்சி’ சிவா. - படம்: ஊடகம்

‘சூது கவ்வும் - 2’ படத்தில் ‘மிர்ச்சி’ சிவாவின் நடிப்பு அருமையாக இருப்பதாக விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். முதல் பாகத்தில் தாஸ் என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். இரண்டாம் பாகத்தில் மிர்ச்சி சிவா அத்தகைய பாத்திரத்தை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் இரு கதாபாத்திரங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை என்று விளக்கம் அளித்துள்ளார் படத்தின் இயக்குநர் அர்ஜுன்.

“விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பரபரப்பாக சித்திரிக்கப்பட்டிருக்கும். ஆனால், குருநாத் என்ற ‘மிர்ச்சி’ சிவாவின் கதாபாத்திரம் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நிதானமாக, கச்சிதமாக அணுகுவதாக அமைக்கப்பட்டுள்ளது,” என்று சொல்லும் இயக்குநர் அர்ஜுன் இயக்கிய முதல் படம் பிரபுதேவா நடித்த ‘யங் மங் சங்’.

“ஒரு நாள் இயக்குநர் நலன் குமாரசாமியுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தபோது ‘சூது கவ்வும்’ இரண்டாம் பாகத்தை எப்படி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தன் மனதில் இருந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

“தயாரிப்பாளர் சி.வி.குமாருக்குப் பிடித்துப்போனதால் அதை திரைக் கதையாக மாற்றி எழுதுமாறு கூறினார். திரைக்கதையை விவரித்தபோது மிகுந்த ஆர்வம் அடைந்த தயாரிப்பாளர், ‘நீங்களே இந்தப்படத்தை இயக்குங்கள்’ என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார்,” என்கிறார் அர்ஜுன்.

படம் வெளியாகும் வரை இவரைப் பார்த்த அனைவருமே விஜய் சேதுபதிக்குப் பதிலாக மிர்ச்சி சிவாவை நடிக்க வைத்திருக்கிறீர்களா என்ற கேள்வியைத்தான் தவறாமல் கேட்டனராம். அதற்கு விளக்கம் சொல்லிச் சொல்லி அலுத்துப்போய் விட்டது என்கிறார்.

“குருநாத் மனித நேயம் உள்ள ஒரு குற்றவாளி. யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் குற்றங்களைச் செய்வதுதான் அவரது வழக்கம். சிவா இந்த பாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். மிக அருமையாக நடித்து அசத்திவிட்டார்.

“சிவா எப்போதுமே ஜாலியாகப் பழகுவார் என்பது எல்லாருக்கும் தெரியும். புத்தர் போன்று ஏதாவது தத்துவமாகப் பேசி படப்பிடிப்புத் தளத்தைக் கலகலப்பாக வைத்துக் கொள்வார். அவர் இதுவரை நடித்த படங்களில் இரண்டாம் பாகங்கள் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு ‘சென்னை 28’, ‘கலகலப்பு -2’ ஆகியவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்,” என்கிறார் அர்ஜுன்.

‘மிர்ச்சி’ சிவாவிடம் கதையை விவரித்தபோது ‘அது நல்ல படமாயிற்றே அதில் போய் என்னை நடிக்கச் சொல்கிறீர்களே’ என்று தயங்கினாராம். ஆனால், முழுக் கதையையும் விவரித்து இருக்கிறார் அர்ஜுன்.

அதன் பிறகு, “நல்லவேளை... முழுக்கதையையும் நான் மட்டுமே சுமக்காத வகையில் மற்ற கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கிறீர்கள். எனவே நானும் இணைவதில் சிக்கல் இல்லை,” என்று கூறினாராம் சிவா.

இப்படத்தில் ஹரிஷா ஜஸ்டின் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் ராதாரவி, வாகை சந்திர சேகர், எம்.எஸ்.பாஸ்கர், உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். முதல் பாகத்தில் நடித்த கருணாகரன் இரண்டாம் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

“கதைப்படி கருணாகரன் நிதியமைச்சர். அவருக்கும் சிவாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. இருவரும் அதனை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதை எதிர்மறை நகைச்சுவையாக காட்சிப்படுத்தி உள்ளோம்.

“‘சூது கவ்வும்’ படம் வெளிவந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பாகத்தை வெளியிடுகிறோம். படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பை விஜய் சேதுபதி வெளியிட்ட போது, ‘எப்படி இருக்கிறது’ என்று கேட்டேன். ‘கதையைச் சொல்ல வேண்டாம், படம் வெளியானதும் திரை அரங்கில் பார்க்க ஆர்வமாக உள்ளேன்’ என்று சொல்லிவிட்டார்.

“வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ஒருவித மன அழுத்தம் இருந்தது,” என்று படம் உருவான கதையையும் மிகவும் சுவாரசியமாக விளக்குகிறார் இயக்குநர் அர்ஜுன்.

குறிப்புச் சொற்கள்