இரண்டாம் முறையாக கர்ப்பம்; சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டும் தீபிகா படுகோன்

இரண்டாம் முறையாக கர்ப்பம்; சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டும் தீபிகா படுகோன்

2 mins read
d77d8ede-fabf-48a2-9724-87fa56747640
தீபிகா படுகோன். - படம்: பின்டர்ரஸ்ட்
multi-img1 of 2
Google News Preferred Icon

பாலிவுட் திரையுலகின் ராணியான தீபிகா படுகோன், தனது தொழில்முறையிலும் தனிப்பட்ட வாழ்விலும் ஒரு பொற்காலத்தை எட்டியுள்ளார்.

இரண்டாவது முறையாகத் தாம் கர்ப்பம் அடைந்துள்ளதை அறிவித்த சில நாள்களிலேயே, எவ்வித இடைவேளையும் எடுக்காமல் அவர் தொடர்ந்து படப்பிடிப்புத் தளங்களில் களமிறங்கியுள்ளது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் தீபிகா- ரன்வீர் சிங் தம்பதியினர் தங்களது இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொண்டனர்.

மூத்த மகள் துவாவின் கையில் கர்ப்பப் பரிசோதனைக் கருவி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்தத் தகவலை அவர்கள் உறுதிப்படுத்தினர். ஆனால், இந்த அறிவிப்பு வெளியான இரண்டு நாள்களிலேயே, தீபிகா மீண்டும் கேமரா முன்னால் தோன்றித் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஷாருக்கானுடன் ‘கிங்’

தற்போது ஷாருக்கானுடன் இணைந்து ‘கிங்’ திரைப்படத்தில் தீபிகா நடித்து வருகிறார்.

மும்பையில் உள்ள ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட படப்பிடிப்புத் தளத்தில் ஏறக்குறைய எட்டு சண்டைக் கலைஞர்களுடன் அவர் மோதும் அதிரடியான காட்சி அண்மையில் படமாக்கப்பட்டது.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் வடிவமைத்த இந்தக் காட்சியை, கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் தீபிகா சவாலாக ஏற்று முடித்துக்கொடுத்துள்ளார். இப்படம் இவ்வாண்டு டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகிறது.

அல்லு அர்ஜுனுடன் ‘ராக்கா’

அதேபோல், இயக்குநர் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’ திரைப்படத்திலும் தீபிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தீபிகா இப்படத்தில் இருந்து விலகக்கூடும் எனப் பரவிய வதந்திகளைப் படக்குழுவினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கடினமான காட்சிகளில் தீபிகா நடித்துவருவது திரையுலகினரிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஒரு தாயாகவும், அர்ப்பணிப்புள்ள கலைஞராகவும் அவர் காட்டும் இந்த உறுதி, இந்தியத் திரையுலகில் ஒரு புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்