எல்லாப் போர்களும் அதிகாரத்தை நோக்கியவையே, எல்லா அதிகாரங்களும் வன்முறை நிறைந்தவையே என்பதைப் பழந்தமிழர் வரலாற்றுப் பின்னணியில் சொன்ன படம் ‘யாத்திசை’.
பெரும் பொருள் செலவில்லாமல், ஒரு பிரம்மாண்டப் படம் பார்க்கும் உணர்வைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியது ‘யாத்திசை’. இது அப்பட இயக்குநர் தரணி ராசேந்திரனுக்குக் கிடைத்த முதல் வெற்றி.
அத்தனை பேரையும் புருவம் உயர்த்தவைத்த அவர், அடுத்து ‘இரண்டாம் உலகப்போர்’ படத்தோடு வருகிறார். அது விரைவில் திரை அரங்குகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“என் ஒவ்வொரு படத்தையும் நான் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். யாரிடமும் உதவியாளராக இருந்ததில்லை. வழக்கமான கதையாக இல்லாமல், தனித்துவமான படமாக இருக்க வேண்டும். யாராலும் செய்ய முடியாத படத்தைச் செய்ய வேண்டும் என்பதுதான் எண்ணமாக உள்ளது,” என்றார் தரணி.
‘யாத்திசை’ படத்தை ரசித்தவர்களால் ‘இரண்டாம் உலகப்போர்’ படத்தையும் புரிந்துகொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.
‘‘உலகப்போர் பற்றி தமிழில் படம் வந்ததில்லை. இந்தப் படத்தின் உண்மைக் கதையை, திரைக்கதையாக மாற்றுவது மிகவும் சவாலான ஒன்று. நடப்புகளைத் துல்லியமாகச் சித்திரிக்க வேண்டும். அந்தப் பொறுப்பு எனக்கு முக்கியமானது.
“1942-44 காலகட்டத்தில் இரண்டாம் உலகப்போர் தீவிரமாக இறுதிக்கட்டத்தில் இருந்தது. பிரிட்டிஷ் ராணுவத்தில் உள்ள இந்தியர்கள் போரில் கலந்துகொள்கிறார்கள். அவர்களில் கணிசமானவர்கள் மெட்ராஸ் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
“அப்படிப் போகிற ஒருவர்தான் நம் கதையின் முக்கியக் கதாபாத்திரம். போர்கள் எல்லாம் கிராமங்களில்தான் நடக்கின்றன. போர் என்ன செய்கிறது, அது எத்தனை கொடூரமானது, அதன் விளைவுகள் என்னென்ன, அது எவ்வளவு பெரிய அழிவுத் தன்மை கொண்டது என்பதையும், போருக்கும் அதிகாரத்துக்குமான அரசியலையும் தெளிவுபடச் சொல்லியிருக்கிறேன்,” என்று படம் குறித்து சில தகவல்களை இயக்குநர் தரணி பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களின் பங்கு பெரிதாக இருக்கிறது. குறிப்பாகத் தமிழர்களின் தியாகமும் சேவையும் இதில் அடக்கம். தமிழர்கள் பிரிட்டன், போலந்து நாட்டுக்கெல்லாம் போய் சண்டை போட்டிருக்கிறார்கள். இந்தக் கதைகள் வெளியே வரவே இல்லை,” என்றார் அவர்.
“படத்துக்கான திட்டங்கள் உருவானபோது முதலில் சமுத்திரக்கனியைப் பார்த்தேன். அவரும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார். அதேபோல் சசிகுமாரும் நம்பிக்கை தந்தார்.
“ஐ.என்.ஏ. வீரராக சசிகுமார் நடிக்கிறார். கிஷோர், சமுத்திரக்கனி மாதிரியான பெரும் அனுபவம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அசோக் செல்வன் ஒரு முக்கியமான இடத்தில் வருகிறார். யூடியூபர் மதன் கௌரியும் நடிக்கிறார்,” என்றும் இயக்குநர் தரணி கூறினார்.
“சேயோன், பவானி, ஷிவதா போன்றவர்கள் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 10 ஜப்பானியர்களும், 100 மியன்மார் நடிகர்களும் இருக்கிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

