பாலிவுட் நடிகர் சல்மான் கான், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது புகழ்பெற்ற ‘கேலக்ஸி அபார்ட்மெண்ட்’ வீட்டை விட்டு, புதிதாகக் கட்டப்படவுள்ள ஆறு மாடி சொகுசு பங்களாவிற்கு குடியேறத் திட்டமிட்டுள்ளார்.
மும்பையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் கேலக்ஸி அபார்ட்மெண்டில் சல்மான் கான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்.
ரமலான், தீபாவளி போன்ற பண்டிகை நாள்கள், அவரது பிறந்தநாளின் போது, இந்த வீட்டின் பால்கனியில் இருந்துதான் ரசிகர்களை நோக்கி சல்மான் கை ஆட்டுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வீட்டின்மீது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த அதிர்ச்சி சம்பவத்தைத் தொடர்ந்து சல்மானுக்கு அரசுத் தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இருப்பினும், தனது ஒட்டுமொத்த குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, மிகவும் பாதுகாப்பான வேறு ஒரு வீட்டிற்கு மாற சல்மானும் அவரது குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.
கடற்கரையோரம் 6 மாடி புதிய பங்களா
தற்போது சல்மான் கான் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே, கடற்கரையோரம் அமைந்துள்ள 70 ஆண்டுகள் பழமையான கட்டடம் ஒன்றை சல்மான் கானின் குடும்பம் வாங்கியுள்ளது.
ஏறக்குறைய 1,014 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த இடத்தில், அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆறு மாடி புதிய பங்களாவைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மும்பை மாநகராட்சியும் மகாராஷ்டிர கடலோர மண்டல மேலாண்மை ஆணையமும் தற்போது இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளன.
இருப்பினும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருதி, அங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது, சுற்றிலும் நாட்டு மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையுடன் இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் முக்கியச் சந்திப்பு இடமாக இருந்த கேலக்ஸி அபார்ட்மெண்டை விட்டு சல்மான் கான் மாறவிருப்பது பாலிவுட்டில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

