கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அர்ஷா பைஜு.
மலையாளத்தில் மூத்த நாயகர்கள் மம்முட்டி, மோகன்லால் தொடங்கி பிருத்விராஜ், நிவின் பாலி வரை அனைவரது படங்களிலும் இவரைப் பார்த்திருக்க முடியும்.
மலையாள ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான இவரை ‘ஹவுஸ் மேட்ஸ்’ படம் வழியாக தமிழ்த் திரையுலகத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.
தமிழில் தனது முதல் படம் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவானது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் அர்ஷா.
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ளாராம். அர்ஷாவின் பெற்றோருக்கும் திரைத்துறையில் ஆர்வம் அதிகமாம்.
அதனால் இவர் நடிக்கலாமா எனக் கேட்ட உடனேயே, பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.
தந்தை பைஜு, தாய் சாந்தினி ஆகிய இருவருமே ஆசிரியர்கள். வாரந்தோறும் புதிதாக வெளியாகும் தமிழ்ப் படங்களைப் பார்க்க குடும்பமாகக் கிளம்பிவிடுவார்களாம்.
“அப்பா தன் கல்லூரி நாள்களில் நிறைய கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அவரும் ஒரு மலையாள நடிகர்தான்.
தொடர்புடைய செய்திகள்
“ஆனால், பணி நிமித்தம் வெளிநாடு சென்றுவிட்டதால் அவரால் சினிமாவைத் தொடர முடியவில்லை. அப்பா விட்ட இடத்தில் இருந்து இப்போது நான் தொடர்வதாக நினைக்கிறேன்,” என்று சொல்லும் அர்ஷா, மலையாளத்தில் தனது முதல் படத்திலேயே நிவின் பாலியுடன் இணைந்து நடித்துள்ளார்.
“பதினெட்டாம் படி’ என்ற அப்படத்தில் நடிக்கும்போது, நான் 12ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஆர்யா, பிருத்விராஜ், மம்முட்டி என நிறைய முன்னணிக் கலைஞர்கள் பணியாற்றிய படம் அது. முதல் படமே பெரிய வெற்றி பெற்றதால் பல வாய்ப்புகள் தேடி வந்தன.
“என்னைப் பொறுத்தவரை முதல் வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. மேலும், அதைத் தக்கவைப்பது இன்னும் சிரமமானது.
“கதை, கதாபாத்திரம், இயக்குநர், நடிகர்கள், மற்ற கலைஞர்கள், தயாரிப்பு நிறுவனம் என அனைத்தையும் கவனித்துப் படங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
“தற்போதைய சூழலில் யார் வேண்டுமானாலும் திரைத்துறையில் கால்பதிக்கலாம். ஆனால், ஒரு படத்தை எடுப்பதைவிட அதனை வெளியிடுவது மிகக் கடினமான செயல். நம்பிக்கைக்குரிய நிறுவனங்கள் தயாரிக்கும் படங்கள்தான் முழுமையாக ரசிகர்களைச் சென்றடைகின்றன.
“அதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதையே என் கொள்கையாக வைத்துள்ளேன். வாய்ப்பு வந்துவிட்டது என்பதற்காக எதையும் ஏற்க முடியாது. நிறைய முன்தயாரிப்பு தேவை.
“என்னைப் பொறுத்தவரை படங்களைத் தேர்வு செய்வதும் எப்போதுமே பெரிய சவால்தான். தேடி வரும் வாய்ப்பைத் தட்டிக்கழிப்பதா அல்லது ஏற்பதா எனப் பலவிதமான யோசனைகள் மனத்தில் தோன்றும். அனைத்தையும் மீறி எனக்கான வாய்ப்புகளைத் தேர்வு செய்கிறேன்,” எனச் சொல்லும் அர்ஷாவுக்கு, இயக்குநர் மணிரத்னம் பிடித்த இயக்குநர்.
மணிரத்னம் படங்களில் நாயகிகளை அழகாகக் காட்சிப்படுத்துவதும் இதற்குக் காரணம் என்கிறார்.
“மணிரத்னம் படங்கள் அனைத்தும் கேரளாவில் வெளியாகும். ஒன்றுவிடாமல் பார்த்திருக்கிறேன். அவரது இயக்கத்தில் நடிப்பது என் கனவுகளில் ஒன்று.
“அதேபோல் இயக்குநர் நெல்சன் இயக்கமும் பிடிக்கும். ‘கோலமாவு கோகிலா’ எனக்குப் பிடித்தமான படம்,” என்கிறார் அர்ஷா.