பல நடிகர், நடிகைகள் ரசிகர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொள்ள விரும்புவதில்லை. பலர் பொதுவெளியில் ‘செல்ஃபி’க்கு மறுத்து கோபப்பட்டதைப் பல காணொளிகளில் பார்த்திருப்போம். ஆனால் இவ்விஷயத்தில் நேர்மாறாக இருக்கிறார் ஷ்ருதிஹாசன்.
சிறார்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பது என்றால் மிக உற்சாகமாகி விடுகிறார். அண்மையில் மும்பை விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருந்தபோது அவரை அணுகிய சிறுவன் ‘செல்ஃபி’ எடுக்கலாமா என்று ஷ்ருதியிடம் கேட்க, சிரித்தபடியே ‘சரி’ எனத் தலையசைத்துச் சம்மதித்துள்ளார்.
ஆனால், அந்த இடத்தில் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் எனப் பலரும் பரபரப்பாக நடமாடியதைக் கவனித்த அவர், திடீரென்று அந்தச் சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்துக்குச் சென்றபின் சிறுவனுடன் படமெடுத்துக் கொண்டார் ஷ்ருதி. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த அந்தச் சிறுவன் தனக்கு அடுத்த வாரம் பிறந்தநாள் என்று ஆசையாக கூறியுள்ளான்.
உடனே அருகில் இருந்த கடையில் ஒரு பரிசை வாங்கி அவனிடம் கொடுத்த ஷ்ருதி, கூடுதலாக சிறுவனின் கன்னத்தில் முத்தமும் கொடுத்தார். பதிலுக்கு சிறுவனும் ஷ்ருதியின் கையில் முத்தமிட, அவன் தலையை அன்பாகக் கோதிவிட்டார் ஷ்ருதி.
உடன்பிறந்த சகோதரிபோல் அவர் அந்தச் சிறுவனிடம் நடந்து கொண்டதை நேரில் கண்ட பலரும் நெகிழ்ந்து போய்விட்டனர்.
இது குறித்து ஏராளமான ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டதையடுத்து, ஷ்ருதிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றனவாம்.

