‘மனிதன் தெய்வமாகலாம்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத். இவர் ஏற்கெனவே ‘டிரிப்’, ’தூக்குதுரை’ ஆகிய படங்களை இயக்கியவர்.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல்களில் ‘சுமைதாங்கி’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ எனத் துவங்கும் பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாடலுக்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. உண்மையான வரிகளைக் கொண்ட பாடல்.
‘நான் நினைத்தால் யாருடைய வாழ்க்கைக்கும் கடவுளாக மாற முடியும்’. அதுதான் இந்தப் படத்தின் கதைக்கரு. இதில் இயக்குநர் செல்வராகவன், முன்னாள் நாயகி கௌசல்யா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களை எற்றுள்ளனர். ஏகே பிரியன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் கதையைத் தயாரிப்பாளரிடம் விவரித்தபோதே செல்வராகவன்தான் அவருக்கான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் எனக் கூறியபோது தயாரிப்பாளர் மறுக்காமல் அதை எற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் இயக்குநர் மஞ்சுநாத்.
இவரது ‘டிரப்’ படத்தை செல்வராகவன் ஏற்கெனவே பார்த்திருந்தாராம். அதனால் படத்தின் கதையைக் கேட்ட உடனேயே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
“இதுவரை பார்த்திராத தோற்றத்தில் செல்வராகவனை இதில் பார்க்க முடியும். தனது கதாபாத்திரத்துக்காக உடல் எடையைக் குறைத்து சிகை அலங்காரத்தை மாற்றி இளையரைப்போல் காட்சித் தருகிறார் செல்வா.
“அடுத்து கௌசல்யாவிடம் கதை சொல்ல, அவருக்கும் பிடித்துப்போனது. செல்வாவைப் போலவே கௌசல்யாவுக்கும் அப்பாவியான முகம். அதேசமயம் அந்தக் கதாபாத்திரத்துக்கு ரசிகர்களுக்குப் பழகிய முகம் இருந்தால் நல்லது எனத் தோன்றியது. அக்கா வேடத்தில் அருமையாக நடித்துள்ளார்.
“படத்தின் நாயகியாக நடித்திருக்கும் குஷி ரவி கன்னடத்தில் வெளியான ‘தியா’ படத்தில் நடித்தவர். மேலும் ‘மைம்’ கோபி, ஒய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“என்னைப் பொறுத்தவரை கத்தியும் ரத்தமுமாக மனிதர்களை ஒரு படத்தின் மூலம் மட்டும் திருத்திவிட முடியாது. அவர்களுக்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும்.
“இப்படத்தின் கதை உண்மையாக நடந்தது. நம்மில் பலர் அதைக் கவனிக்காமல் கடந்து போய்விட்டோம். அந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளேன். நிச்சயமாக இது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்கிறார் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்.

