உலகின் பணக்கார நடிகர்களின் பட்டியலில் ஷாருக்கான் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இதன் மூலம் ஹாலிவுட் நடிகர்கள் டாம் குரூஸ், டெய்லர் சுவிஃப்ட் ஆகியோரை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
புதிதாக வெளியான பட்டியலின்படி, ஷாருக்கானின் மொத்த சொத்து மதிப்பு ரூ.12,490 கோடியாக (S$ 1.80 பில்லியன்) அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இவரது சொத்து மதிப்பு வெறும் 870 மில்லியன்தான். ஆனால், ஒரே ஆண்டில் யாரும் எதிர்பாராத வகையில் அது கிட்டத்தட்ட ஒன்றரை மடங்குக்கு மேல் அதிகரித்துவிட்டது.
கடந்த முப்பது ஆண்டுகளில் நடிப்பதுடன் நிற்காமல், படத் தயாரிப்பு, சொந்த ஸ்டூடியோ, கிரிக்கெட் அணிகள், சொத்துச் சந்தை என்று பலவிதமாகத் தனது தொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வந்தார் ஷாருக். ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ‘கோல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி இவருடையதுதான்.
ஷாருக்கானுக்கு அடுத்துள்ள இரண்டாம் இடத்தை அவரது தொழில் கூட்டாளியான நடிகை ஜூஹி சாவ்லா (ரூ.7,790 கோடி) பெற்றுள்ளார்.
நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ரூ.2,160 கோடியுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
தற்போது நடிகர் ஷாருக்கான் தன் மகள் அறிமுகமாகும் ‘கிங்’ படத்தில் நடித்து வருகிறார்.