2023-24ஆம் நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்திலும் நடிகர் விஜய் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
அமெரிக்க இதழான ‘ஃபாா்ச்சூன்’ வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் 10 இடங்களில் பாலிவுட் நடிகர்களில் பலர் இடம்பிடித்துள்ளனர்.
கோலிவுட் நடிகர்களில் விஜய் மட்டுமே இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அதிக வருமான வரி செலுத்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஷாருக்கான் ரூ.92 கோடியும் இரண்டாவது இடத்தில் உள்ள நடிகர் விஜய் ரூ.80 கோடியும் வரி செலுத்தியுள்ளனர்.
மூன்றாவதாக சல்மான் கான் ரூ.75 கோடியும் நான்காவதாக அமிதாப் பச்சன் ரூ. 71 கோடியும் ஐந்தாவதாக கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி ரூ.66 கோடியும் வரி செலுத்தியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து, 6வதாக அஜய் தேவ்கன் ரூ.42 கோடியும் 7வதாக கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ரூ.38 கோடியும் செலுத்தியுள்ளனர்.
ஹிருத்திக் ரோஷன், சச்சின் டெண்டுல்கர் தலா ரூ.28 கோடி, கபில் ஷர்மா ரூ.26 கோடியுடன் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
ஷாருக்கான் கடந்த ஆண்டு தொடர்ச்சியாக ‘பதான்’, ‘ஜவான்’, ‘டுங்கி’ என மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்தார். இவர் இப்போது சுஜாய் கோஷ் இயக்கும் ‘கிங்’ படத்தில் நடித்து வருகிறார்.
மறுபுறம், நடிகர் விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது ‘தி கோட்’ படம். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
தென்னிந்திய நடிகா்கள் மோகன்லால், அல்லு அா்ஜுன் ஆகிய இருவரும் தலா ரூ.14 கோடி வரி செலுத்தியுள்ளதாகவும் ‘ஃபாா்ச்சூன்’ இதழ் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.