அண்மையில் கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டது குறித்து நடிகை ஷகீலா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி, அவருக்கு என்ன ஆயிற்று என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
ரசிகர்களின் இந்தக் கேள்விகளுக்குத் தமது யூடியூப் பக்கத்தில் ஷகீலா காணொளி வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.
“ஒரே இடத்தில் படுத்துக்கொண்டே தொடர்ந்து நான்கு மணி நேரம் வரை என் கைப்பேசியில் ‘கேம்’ விளையாடுவேன். ‘
“காப்பி, தேநீர் குடிப்பதற்கு மட்டும் எழுந்திருப்பேன்; அதனைக் குடித்துவிட்டு மீண்டும் வந்து விளையாடுவேன்.
“இது மட்டுமல்ல. யூடியூப், இன்ஸ்டகிராமில் பல மணிநேரம் ‘ரீல்ஸ்’ பார்ப்பேன்.
“இப்படி கைப்பேசியை அதிகமாகப் பயன்படுத்தியதால் என் கழுத்தில் உள்ள முக்கிய ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, இப்போது அறுவை சிகிச்சையில் வந்து முடிந்துள்ளது. இது எனக்கு தேவையில்லாத செலவு.
“செலவு என்பதை விட வலி மற்றும் வேதனையாக இருக்கிறது,” எனக் கூறியுள்ளார்.
“உங்கள் எல்லோருக்கும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன்; குழந்தைகள் கையில் கைப்பேசியைக் கொடுப்பதை நிறுத்துங்கள்.
“அதேபோல் நீங்களும் எந்த அளவிற்கு அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியுமோ அந்த அளவிற்குத் தவிர்த்துக்கொள்ளுங்கள்,” என்றார்.
அத்துடன், “எனக்கு இப்போது இந்தச் சிகிச்சைக்காக மட்டும் 3 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
எனவே, “கைப்பேசியைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள்; உடம்பைப் பார்த்துகொள்ளுங்கள்,” என்று ரசிகர்களுக்கு நடிகை ஷகீலா அறிவுறுத்தியுள்ளார்.


