சண்முக பாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு துவக்கம்

சண்முக பாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பு துவக்கம்

1 mins read
dedf5eed-3076-483d-825c-de442231d3dc
சண்முக பாண்டியன். - படம்: மாலை மலர்

மறைந்த பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘வாணவேடிக்கை’ எனப் பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு பூசையுடன் சென்னையில் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கும் இத்திரைப்படத்தை, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’ போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் திரு இயக்குகிறார்.

சென்னையில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை இயக்க, தயாரிப்பாளர் எல்.கே. சுதீஷ் ‘கிளாப்’ அட்டையை அடித்து முதல் காட்சியைத் துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் பங்கேற்று படக்குழுவினரை வாழ்த்தினர்.

இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். சரவணன், இயக்குநர் தமிழ், ஜெயப்பிரகாஷ் மற்றும் கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தலைப்பை அறிமுகம் செய்யும் வகையில் உருவாகியுள்ள குறுங் காணொளியை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இதுவரை நீங்கள் பார்த்திராத புதிய சண்முக பாண்டியனை இப்படம் காட்டும். இது தந்தைக்கும் மகனுக்குமான உணர்வுபூர்வமான கதையைக் கொண்ட ஒரு அழகிய வணிகத் திரைப்படமாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் இயக்குநர் திரு.

முழுக்க முழுக்க சென்னையில் படமாக்கப்பட உள்ள இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்