ஒரு தாயைப்போல் என்னைக் கவனித்துக் கொண்டார்: பவதாரிணியின் கணவர் உருக்கம்

3 mins read
a6a4c3ec-f2b9-4c46-81a8-df057d1a825f
பவதாரிணியுடன் சிவராஜ். - படம்: ஊடகம்
multi-img1 of 2

இளையராஜாவின் செல்ல மகள் பவதாரிணி காலமாகி ஓராண்டு ஆகிவிட்டது.

மொத்த குடும்பமும் அவரது நினைவால் வருத்தத்தில் மூழ்கியிருக்க, பவ தாரிணியின் கணவர் சபரிராஜ், மனைவியின் பிரிவால் உறைந்துபோய் இருக்கிறார்.

பவதாரிணியின் குடும்பப் பாசம், தந்தை இளையராஜா மீதான அன்பு, அன்பான மனைவியாக அவர் காட்டிய பண்பு எனப் பல விஷயங்களை ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியின்போது பகிர்ந்துள்ளார் சபரிராஜ்.

“குடும்பத்தார் ஏற்பாட்டில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 2005ஆம் ஆண்டு முதன்முறையாகச் சந்தித்தபோதே ஒருவருக்கு ஒருவர் பிடித்துப்போனது.

“எனக்குப் பிடித்தமான உணவுகளைச் சமைப்பதில் தொடங்கி, அனைத்துப் பணிவிடைகளையும் பவதா (பவதாரிணி) செய்வார். ஒரு தாயைப்போல் என்னைக் கவனித்துக்கொண்டார்.

“பிறரை வியப்படைய வைத்து மகிழ்ச்சி ஏற்படுத்துவது அவருக்கு மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறையும் என் பிறந்தநாளுக்கு ஏதாவது புதிதாகச் செய்து ஆச்சரியப்படுத்துவார்.

“அப்படியோர் பேரன்பான மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எனக்கு உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டபோது அழுது துடித்துவிட்டார் பவதா. எந்தெந்த மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்து நேரத்துக்குக் கொடுப்பார்.

“புற்றுநோய் சிகிச்சைக்காக இலங்கைக்குச் சென்றபோதுகூட எனக்கான மாத்திரைகளைக் கொடுக்க அவர் மறக்கவில்லை. அப்படிப்பட்ட என் அன்பு மனைவிக்கு திடீரென 2023 டிசம்பர் 21ஆம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது.

“சாதரணமாகத்தான் மருத்துவமனைக்குச் சென்றோம். சில பரிசோதனைகளுக்குப் பிறகு கல்லீரல் புற்றுநோய் என்று தெரிய வந்தபோது இடிந்துபோனோம். ஆனால், பவதா எதையும் வெளிக்காட்டாமல் இயல்பாக இருந்தார்.

“நான்காம் கட்டத்தை எட்டிய புற்றுநோய் என்பதால் ஒன்றும் செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவர் ஏற்கெனவே எடை குறைவானவர். எனவே ‘கீமோதெரபி’ சிகிச்சை முறை அவருக்கு அதிக வலி கொடுக்கும் என்பதால் தவிர்த்தோம்.

“2024 ஜனவரி 16ஆம் தேதி நானும் பவதாவும் இலங்கை சென்றோம். நிறைய மாத்திரைகள் கொடுத்தனர். பவதா அவற்றை விழுங்க சிரமப்பட்டார். உடல்நிலை மேலும் மோசமடையவே, இந்தியா திரும்ப முடிவான நிலையில், தன் தந்தையின் கச்சேரி இலங்கையில் நடப்பதால் அதைப் பார்த்த பிறகு நாடு திரும்பலாம் என்றார்.

“அவர் ஆசைப்பட்டது போலவே இளையராஜா மாமா வந்த பின்னர் அவருடன் நீண்ட நேரம் பேசினார். இந்தச் சந்திப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் தந்தையைச் சந்திப்பதுதான் பவதாவின் கடைசி ஆசை என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

“25ஆம் தேதி மருத்துவர்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதும் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பவதாவை மீட்க முடியவில்லை. ஒரே மாதத்திற்குள் எல்லாம் முடிந்துபோனது.

“பவதாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா மீது அளவு கடந்த பாசம் உண்டு. வீட்டில் கடைக்குட்டி என்பதால் யுவன் மீது கூடுதல் பாசம் வைத்திருந்தார். எனக்கு, என் தம்பி எப்போதுமே மூன்று வயது பையன்தான் என்று அடிக்கடிச் சொல்லுவார்.

“மகளை இழந்த துக்கத்தில் என் மாமனார் 15 நாள்களுக்கு மாடியில் இருந்து கீழே இறங்கி வரவேயில்லை. யாரிடமும் பேசவுமில்லை.

“தான் வாழும்போதே மனைவி, மகளைப் பறிகொடுத்துவிட்ட துயரம் யாருக்கும் வரக்கூடாது. துயரத்தின் வலியை இசையால் மறக்கிறார். பவதா மறைவுக்குப்பிறகு அவர் மீதான பாசம் இன்னும் கூடிவிட்டது.

“மாதந்தோறும் பவதாவின் நினைவிடத்துக்குப் போய்விடுவேன். மீதமுள்ள வாழ்க்கையை கடக்க என் மனைவியின் நினைவுகள் மட்டுமே போதும்,” எனக் கண்கலங்குகிறார் சபரிராஜ்.

அந்தக் கண்ணீரில் காதலும் கரைந்து வழிகிறது.

குறிப்புச் சொற்கள்